சென்னையில் ஷீரடி பாபாவின் பொக்கிஷம்!
எதற்குமே ஆசைப்படாத ஷீரடி பாபா ஒரு செப்புக்காசு மீது பிரியம் கொண்டு அதனை தன் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்கச்சொன்னார், அந்த காசு தற்போது சென்னை வந்துள்ளது. பாபாவின் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவர் வாமன் ராவ் .இவரிடம் ஒரு செப்புக்காசு வந்து சேர்ந்தது.அந்தக் காசில் ஒரு புறம் ராமர்,லட்சுமணர்,சீதை உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது.மறுபக்கம் சஞ்சீவி மலையை கையில் துாக்கியபடி இருக்கும் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது.நாணயத்தின் இருபக்கமும் அந்த செப்புக்காசு அச்சடிக்கப்பட்டது 1918ம் ஆண்டு என்று குறிக்கப்பட்டு இருந்தது.
இந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு பாபாவிடம் கொடுத்து ஆசீர்வாதித்து தருமாறு கேட்டுக்கொண்டார்.வழக்கமாக எதைக்கொடுத்தாலும் அதை உதீயுடன்(திருநீறு)சேர்த்து ஆசீர்வாதித்து கொடுத்துவிடும் பாபா அந்த நாணயத்தை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு தன் பையில் போட்டுக்கொண்டார்.
எதற்குமே ஆசைப்படாத பாபா ஆர்வமாக வைத்துக்கொண்ட அந்த செப்புக்காசை பின் தன் இன்னோரு பக்தர் ஷாமா என்பவரிடம் கொடுத்து இது ஒரு பொக்கிஷம் உன் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடு என்று சொல்லி கொடுத்தார்.அதன்படி ஷாமாவாலும் பின் அவரது சந்ததியினராலும் பாதுகாக்கப்பட்டு இதுநாள் வரை வழிபடப்பட்டு வருகிறது. சென்னை தி.நகர்,சரோஜினி தெருவில் இயங்கிவரும் ஷீரடி சாயிபாபா தியான மையத்தின் நிர்வாக அறங்காவலரான திருவள்ளுவன்,பாபா பொக்கிஷமாக போற்றிய இந்த செப்புக்காசை சென்னைக்கு கொண்டுவந்து இங்குள்ள பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கவேண்டும் என்று விரும்பினார்.
இது குறித்து ஷாமா குடும்பத்தினரிடம் பேசி சம்மதிக்க வைத்ததில் பாபா போற்றிய அந்த பொக்கிஷமான செப்புக்காசு சென்னை வந்துள்ளது.குரு பூர்ணிமா தினமான இன்று இந்த செப்புக்காசு சென்னை வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள தருமபுரஆதீனமடத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.இது தொடர்பான கூடுதல் விவரத்திற்கு திருவள்ளுவனை தொடர்பு கொள்ளவும் எண்:9444453777.
-எல்.முருகராஜ்