வடமதுரை திருவிழாவில் இன்று முத்துப்பல்லக்கு
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்றிரவு வசந்தம் முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. ஆடித்திருவிழா ஜூலை 11ல் துவங்கி வரும் 23 ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் மண்டக படிதாரர் வழிபாட்டில் அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஜூலை 17 லிலும், தேரோட்டம் நேற்றுமுன்தினமும் நடந்தது. 13 நாள் திருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு இன்றிரவு நடக்கிறது. சன்னதியில் இருந்து முத்துபல்லக்கில் புறப்படும் சுவாமி, இரவு முழுவதும் நகரை வலம் வந்து நாளை அதிகாலை சன்னதி திரும்புவார். விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.