உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் தலைகீழாக நடப்பட்ட சூலாயுதம்: பக்தர்கள் அதிர்ச்சி!

கோவிலில் தலைகீழாக நடப்பட்ட சூலாயுதம்: பக்தர்கள் அதிர்ச்சி!

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, அம்பாயிரம்மன் கோவில் மூலவர் எதிரே, தலைகீழாக சூலாயுதத்தை குத்தி ஈடு போட்டுள்ளனர். ஆத்தூர் அருகே, பெரியேரி வசிஷ்ட நதி, வடக்கு கரை பகுதியில், பழமை வாய்ந்த அம்பாயிரம்மன் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை நாளில், பேய் விரட்டுதல், பில்லி சூனியம் நிவர்த்தி வழிபாடுகள், பவுர்ணமி நாளில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், ஊர் பிரச்னையில் பாதிக்கப்பட்ட ஒருவர், அம்பாயிரம்மன் கோவில் மூலவர் எதிரே, பெரிய சூலாயுதம் ஒன்றை, தலைகீழாக நட்டு வைத்து ஈடு போட்டுள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் அம்பாயிரம்மனை வழிபாடு செய்துவிட்டு, ஊஞ்சல் அருகில், ஈடு போட்டுள்ள சூலாயுதத்தை பார்த்து அச்சத்துடன் செல்கின்றனர்.

இதுகுறித்து, கோவில் பூசாரிகள் கூறியதாவது: திருட்டு, ஏமாற்றமடைதல், சொத்து பிரச்னை, ஊர் பிரச்னையில் பாதிப்பு போன்ற காரணங்களால், அம்மனை வழிபாடு செய்து, சூலாயுதத்தை பிடுங்கி தலைகீழாக நட்டு வைத்து செல்வர். தங்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டவுடன், ஆடு, கோழிகள் பலி கொடுத்து வழிபாடு செய்வர். ஊர் பிரச்னைக்காக ஒருவர், சூலாயுதத்தை தலைகீழாக நட்டுள்ளார். இந்த சூலாயுதத்தை பிறர் தொட மாட்டார்கள், வேறு எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !