உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை

பழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை

பழநி: ஆடி முதல்வெள்ளி நாளான நேற்று பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நுாறாயிம் மலர்களால் அர்ச்சனை துவங்கியது. பழநி ஊர்க்கோயில் பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 16 முதல் ஆக.,9 வரை தினசரி மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நுாறாயிரம் மலர்கள் துாவி லட்சார்ச்சனை பூஜைகள் நடக்கிறது. ஆக.,10ல் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடைபெறவுள்ளது. நேற்று முதல் ஆடிவெள்ளியை முன்னிட்டு காலை 7மணிக்கு பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்குமேல் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. அழகுநாச்சியம்மன்கோயில், வனதுர்க்கைய ம்மன்கோயில், மாரியம்மன் கோயிலில் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில், வனதுர்க்கை, மகிஷாசூரமர்த்தனி, லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

புதுதாராபுரம்ரோடு ரெணகாளியம்மன், புதுநகர் ரயில்வேகேட் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் கூழ் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சின்னாளபட்டி: கரியன்குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்து கூழ் தயாரித்தனர். வேப்பிலை சுற்றிய 9 கலயங்களில் கூழ் நிரப்பப்பட்டது. இக்கலையங்களுடன் 3 முறை கோயிலை வலம் வந்தபின், முன்புறமுள்ள நாகர் சன்னதியில் வழிபாடு நடந்தது. பின்னர், கருவரைக்கு கலயங்கள் அழைப்பு நடந்தது. சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்குப்பின், பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. மேட்டுப்பட்டி, நடூர், தென்புதுார், கீழக்கோட்டை, ஜனதா காலனியில் சவுடம்மன் கோயில், கெடி தெரு சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயில்களிலும் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில்களிலும் ஆடி வெள்ளி சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில், 16 வகை அலங்காரத்துடன் சிறப்பு பூசைகள் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்து, அன்னதானத்தில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 108 சிவசக்தி அன்னதானக்குழு, காமாட்சி அம்மன் கோயில் அன்னதானக்குழு செய்திருந்தனர். காமாட்சி அம்மன் மற்றும் பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில்களிலும் அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பெண்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !