உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவிலில் குவிந்த பெண்கள்

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவிலில் குவிந்த பெண்கள்

கோபி: ஆடி வெள்ளியை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், பெண்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. கோபி, பாரியூரில் பிரசித்தி பெற்றது கொண்டத்து காளியம்மன் கோவில். ஆடி வெள்ளியை முன்னிட்டு, நேற்று காலை முதலே, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். காலை, 7 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. உச்சிகால பூஜையில் அம்மனை தரிசிக்க பெண்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அம்மன் சன்னதி எதிரே உள்ள குண்டத்தில், உப்பு, மஞ்சள், குங்குமத்தை கொட்டி விளக்கேற்றி வழிபட்டனர்.

*பவானியில் உள்ள செல்லியாண்டியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், மேற்குத் தெரு மாரியம்மன் கோவில் உட்பட பல கோவில்களில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மனுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, திராட்சை, சப்போட்டா, எலுமிச்சை உட்பட பல்வேறு கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

*புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், ஊத்துக்குளியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், சௌடேஸ்வரியம்மன் கோவில்களில் அபிஷேக, ஆராதனை நடந்தது. பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதே போல் ஈரோடு மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்கள், ஆடி வெள்ளியால் நேற்று களைகட்டின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !