உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கம்பம் நடல்

மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கம்பம் நடல்

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழா கம்பம், நேற்று நடப்பட்டது. ஆடித்திருவிழாவையொட்டி, மருளையம்பாளையத்தில் இருந்த, தேர்வு செய்யப்பட்ட பால மரத்துக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து, வண்ண மலர்களால், நேற்று முன்தினம் அலங்கரித்தனர். பின், மரம் வெட்டி எடுக்கப்பட்டு, ஊர்வலம் வந்தது. ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாதேஸ்வரன் கோவிலில் வைத்து, மரத்தை செதுக்கி சீர் செய்தனர். நேற்று மாலை, மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பாவடியில் இருந்து, கம்பத்தை மஞ்சள் குங்குமம் பூசி, மலர்களால் அலங்கரித்து ஊர்வலம் எடுத்து வந்து, மாரியம்மன் முன் நடப்பட்டது. இதையொட்டி, வரும், 2ம் தேதி இரவு, சத்தாபரணம் நடக்கிறது. ஆக., 10ம் தேதி காலை, தேரோட்டம், பூச்சட்டி ஊர்வலம், அக்னி குண்டம் இறங்குதலும், 11ம் தேதி பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், ஆடு, கோழிகளை பலியிடுதலும் நடக்கிறது. 19ம் தேதி, பூங்கரகம், பூந்தேர் ஊர்வலம், 20ம் தேதி மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், திருவிழா நிறைவு பெறும். இன்று முதல், தினமும் இரவு, உற்சவர் மாரியம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !