உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானியம்மனை தரிசிக்க மாட்டு வண்டிகளில் பயணம்

பவானியம்மனை தரிசிக்க மாட்டு வண்டிகளில் பயணம்

பொன்னேரி: ஆடி மாதத்தை முன்னிட்டு, பெரியபாளையம் பவானி அம்மனை தரிசிக்க, பக்தர்கள் மாட்டு வண்டிகளில் பயணிக்கின்றனர். பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், ஆடி மாதம் முழுவதும் விசேஷமாக இருக்கும். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் குடும்பத்தினருடன் சென்று அம்மனை தரிசித்து வருகின்றனர். பவானி அம்மனை தரிசிக்க செல்வோர், நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக ஒரு நாள் முன்னதாக சென்று இரவு தங்கி, அடுத்த நாள் காலை அம்மனை தரிசித்து, அங்கேயே அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு விட்டு திரும்புவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். போக்குவரத்து வசதி இல்லாத காலங்களில், மாட்டு வண்டிகளில் பயணித்தவர்கள் தற்போது, கார், பேருந்து என, பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனால், ஒரு சிலர் இன்னும் அந்த மாட்டு வண்டி பயணத்தை விரும்புகின்றனர். கோவிலுக்கு சென்று காலியாக உள்ள இடங்களில் மாட்டு வண்டிகளை நிறுத்தி, அம்மனை தரிசித்து, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, மகிழ்ச்சியாக ஊர் திரும்புகின்றனர். மற்ற நாட்களில் பார்க்க முடியாத இந்த மாட்டு வண்டிகளை ஆடி மாதத்தில், பொன்னேரி - மீஞ்சூர் நெடுஞ்சாலையிலும், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையிலும், காண முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !