பெயர்ச்சியடைந்தார் குருபகவான்: குருதலங்களில் குவிந்த பக்தர்கள்!
மதுரை: நவக்கிரகங்களில் சுபகிரமான குருபகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இன்று காலை 9.23 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகிலுள்ள தென்குடித்திட்டை, மதுரை அருகிலுள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் குரு கோவில், திருச்சி அருகிலுள்ள உத்தமர்கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி அகரம் குரு கோவில் உள்ளிட்ட குருதலங்களிலும், சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறுகிறது.
இதையொட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் வருமாறு: ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசியினருக்கு நற்பலன் நடக்கும். மேஷம், கடகம், துலாம், தனுசு ஆகிய ராசியினருக்கு சுமாரான பலனும், மிதுனம், கன்னி, கும்பம் ஆகிய ராசியினருக்கு மிக சுமாரான பலனும் நடக்கும் என்பதால் இவர்கள் குரு கோவில்களில் பூஜை செய்து கொள்ள வேண்டும். கன்னி ராசியில் ஒரு ஆண்டு தங்கும் குருபகவான் 2017 செப்., 2ல் துலாம் ராசிக்கு செல்வார். குருபெயர்ச்சி முடிந்த பிறகும் பரிகார பூஜைகளை தொடர்ந்து செய்ய முக்கிய குரு தலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.