உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கருட சேவை கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கருட சேவை கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை மங்களாசாசனம், இரவில் ஐந்து கருட சேவையும் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் ஆடிப்பூர விழாவின் 5ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு மங்களாசாசனத்தை தொடர்ந்து, ஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார், பெரியபெருமாள், சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீனிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் எழுந்தருளினர். 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த மங்களாசாசனத்தில் வாழ்த்துப்பா பாட, தீர்த்தவாரி, சடாரி ஆசீர்வாதம் நடந்தது. ஆண்டாள் ரெங்கமன்னார், பெருமாள்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

ரதவீதிகளில் வலம்: இதன்பின் ஆண்டாள், ரெங்கமன்னார் சிங்கம்மாள் குறடு மண்டபம், பெருமாள்கள் கஜலட்சுமி மண்டபத்திலும் எழுந்தருள, இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவை துவங்கியது. இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனம், பெரியாழ்வார் சின்ன அன்னவாகனம், ரெங்க மன்னார், பெரியபெருமாள், சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும் எழுந்தருளினர். மாடவீதிகள் மற்றும் ரதவீதிகளில் வலம் வந்த பெருமாள்களை திரளான  பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாக்கோலம்: விருதுநகர், மதுரை,  துாத்துக்குடி, திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி நேற்று காலை முதல் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !