உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா!

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா!

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மழை,  வெள்ளம், பக்தர்களுக்கு அவ்வப்போது அனுமதி மறுப்பு என பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் அனைத்து தடைகளையும் கடந்து  வழக்கமான உற்சாகத்துடன் அமாவாசை விழா நடந்தது.

சதுரகிரி மலையில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கசுவாமிகளுக்கு  முக்கிய திருவிழாவாக ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சி க்கி 8 பேர் உயிரிழந்தனர்.

மழையால் தடை: இதனால் பக்தர்கள்  அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்கு மட்டும் தலா 4 நாட்கள் வீதம் மலைக்கு செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆடி அமாவாசை திருவிழாவிற்காக ஜூலை 28 முதல் ஆக., 4 வரை 8 நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.  ஆனால் மலைப்பாதை திறக்கப்பட்ட நாள் முதல் மழை பெய்து, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அனுமதி ரத்து செய்யப்பட்டு  பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மழை நின்று ஆறுகளில் வெள்ளம் வடிந்தபின் மீண்டும் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  இவ்வளவு தடைகள் ஏற்பட்ட போதிலும் அவைகளை கடந்து நேற்று நடந்த ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மலையில்  குவிந்தனர்.

நெரிசல்: மாங்கேணி ஓடை, வழுக்குப்பாறை, கோரக்குண்டா, ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் ஒரே நேரத்தில்  பக்தர்கள் மலையேறியதால் நெரிசல் ஏற்பட்டது. மற்ற இடங்களில் பாதைகள் சற்று அகலப்படுத்தப்பட்டிருந்ததால் பிரச்சனையின்றி பக்தர்கள்  செல்ல முடிந்தது. காத்திருந்த பக்தர்கள் சுந்தரமகாலிங்கசுவாமிக்கு அதிகாலையில் 18 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  பின்னர் நாகாபரண அலங்காரத்தில் எழுந்தருளினார். சந்தன மகாலிங்கசுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு  நடந்தது. சுந் தரமூர்த்தி  சுவாமிக்கு புஷ்பஅலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்  செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் மந்திதோப்பு, மாவூத்து, தாணிப்பாறை , மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு, தேனி மாவட்டம் உப்புத்துறை  பகுதிகளில் வயல், தோப்பு களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடாரங்கள் அமைத்து ஆடு, கோழி, பலியிட்டும், மொட்டை எடுத்தும் நேர்த்திக்கடன்  செலுத்தினர். மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், உதவி ஆணையர் இளையராஜா, கோயில் செயல்அலுவலர் பொறுப்பு  வேல்முருகன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர். நேற்று காலை மதுரை கலெக்டர் வீரராகவராவ், மலைக்கு சென்றும், மதுரை டி.ஐ.ஜி.,  அனந்தகுமார் சோமானி, விருதுநகர் எஸ்.பி. (பொறுப்பு)  ராஜராஜன் அடிவாரப் பகுதிகளிலும் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை  கவனித்தனர்.

பக்தர் உயிரிழப்பு: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த நடராஜன்,60,  உறவினர் களுடன் வந்தார். நேற்று காலை மலைப்பாதையில் நடந்து  சென்றபோது பலாஅடி கருப்பசாமி கோயில் அருகே மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை  டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டுவந்து ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !