பழநியில் ஆடிப்பெருக்கு விழா தேங்காய் சுடும் நிகழ்ச்சி
பழநி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழநி பெரியாவுடையார் கோயில் சண்முகநதியில் சப்தகன்னிகள் அஸ்திரதேவர் சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநி திருஆவினன்குடி குழந்தைவேலாயுதசுவாமி, பெரிய நாயகியம்மன், பெரியாவுடையார் கோயில்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து பெரியாவுடையார் கோயிலுக்கு உமாமகேஸ்வரர், உமாமகேஸ்வரி, விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் புறப்பாடு நடந்தது. கோயிலின் முன் உள்ள சண்முகநதி ஆற்றில் மண் எடுத்து சப்தகன்னிகள் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது பக்தர் பலர் பங்கேற்றனர்.
தேங்காய் சுடும் நிகழ்ச்சி: ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பழநி கோதைமங்கலம், பாலசமுத்திரம், அ.கலையம்புத்துார், வண்டிவாய்க்கால் கிராம பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். சண்முகநதி ஆற்றங்கரையில் களிமண் எடுத்து அதில் சப்த கன்னிமார்களை வடிவமைத்து, மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்தனர். தேங்காயை உரித்து தண்ணீரை எடுத்துவிட்டு அவல், கடலை, பாசிப்பயறு, எள்ளு, நாட்டு சர்க்கரை நிரப்பி மூடியபின் தீயில் சுட்டு எடுத்தனர். அதிலுள்ள பொருட்களை சுவாமி படைத்து வழிபட்டனர். பின் படையல் பொருட்களை நதியில் கரைத்தனர்.