உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதையுண்ட கோயில் தெப்பக்குளம் : தொல்லியல் துறையினர் ஆய்வு

புதையுண்ட கோயில் தெப்பக்குளம் : தொல்லியல் துறையினர் ஆய்வு

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூரில் மண்ணில் புதைந்த 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் தெப்பகுளம் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பவளநிற வள்ளியம்மன், பூவேந்திய நாதர் கோயில் 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சிவஸ்தலம். தும்பி சேன நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாக கோயில் கல்வெட்டுகளில் உள்ளது. இங்குள்ள அம்மன் சன்னதிக்கு முன்புறம், கோயில் பிரகாரத்திற்கு வெளியே ராவண மண்டபம் அமைந்துள்ளது. ராவணன் பூஜித்த சிவன் கோயில் என்ற பெருமை பெற்றது. ஒரு ஏக்கரில் இங்குள்ள மகாசபை தெப்பக்குளத்தில் ஆண்டிற்கு ஒருமுறை வளரும் பழத்தை உண்டு ரிஷி ஒருவர் சிவபூஜை செய்து வந்தார். ஒருநாள் அப்பழத்தை பெண் ஒருவர் உண்டதால், அப்பெண்ணுக்கு முனிவர் சாபம் இட்டார். சாபத்தால் பெண்ணின் உடற்சதைகள் அறுந்து விழ, சிவலிங்கம் முன்பு கதறி அழுதார். அப்போது மணல் மாரியாக (மழை) பொழிந்ததால், இவ்வூர் மாரியூர் என பெயரிடப்பட்டது. கோயில் மணலில் மூழ்கிய நிலையில், வேட்டைக்கு வந்த பாண்டிய மன்னன், காலில் தட்டுப்பட மணல் அகற்றப்பட்டு, கோயில் வெளியுலகிற்கு தெரிந்தது. மாரியூர் பிரதோச கமிட்டி நிர்வாகி பன்னீர் செல்வம் கூறியதாவது: மகா சபை தெப்பக்குளம் அமைந்த இடத்தை, ஆய்வு செய்வதற்காக 2001ல் தொல்லியல் ஆய்வுத் துறையினர் 10 அடி ஆழம் தோண்டியதோடு அப்படியே கிடப்பில் போட்டனர். கோயில் தெப்பக்குளம் பூமிக்கடியில் மணல் சூழப்பட்டுள்ளது என்பது இப்பகுதி மக்களின் தொன்று தொட்ட நம்பிக்கையாக உள்ளது.கோயிலின் ஆகம விதிப்படி சிவாலயத்திற்கு எதிர்புறம் தெப்பக்குளம் அமைந்துள்ளதாக, முன்னோர் கூறியுள்ளனர். இக்கோயில் கல்வெட்டுகள், அமைப்பு சார்ந்த விஷயங்களை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !