உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழாவில் அன்னையின் தேர் பவனி

தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழாவில் அன்னையின் தேர் பவனி

தூத்துக்குடி, தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா சர்ச் திருவிழாவில், அன்னையின் திரு உருவ பவனி சர்ச் வளாகத்திற்குள் சுற்றி வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கு பெற்றனர். தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா சர்ச் திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26 ம் தேதி முதல் ஆக., 5 ம் தேதி வரை நடக்கும். இந்தாண்டு ஜூலை 26 ல் பிஷப் இவோன் அம்பு ரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்பார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் சர்ச்சுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். ஆறாம் திருவிழாவான ஜூலை 31 ல் நற்கருணை,புது நன்மை, கூட்டு திருப்பலி நடந்தது. மாலை நற்கருணை பவனி நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு பிஷப் தலைமையில் பெருவிழா ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் திருவுருவம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி நடந்தது. இதில் சர்ச் வளாகத்திற்குள் மட்டும் பவனி நடந்தது. இன்று ஆக., 5 ல் காலை 5.30 மணிக்கு திருப்பலி, 6 மணிக்கு இரண்டாம் திருப்பலியும், 7.30 மணிக்கு மதுரை முன்னாள் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. பகல் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் நன்றி திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் திருவுருவம் நகர் வீதிகளில் வலம் வரும். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தேர்பவனியை வரவேற்பார்கள். இத்திருவிழாவிற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆக., 5 ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !