சிவாலயங்களில் நாகாபரணம் சூட்டும் காரணம்!
ADDED :3392 days ago
சிவாலயங்களில் உள்ள லிங்கத்திற்கு மேல், உலோகத்தில் செய்த ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக சூட்டுகிறார்கள். இதற்கு காரணம் தெரியுமா? சில ரிஷிகள் தாருகாவனம் என்னும் இடத்தில் யாகம் நடத்தினர். தாங்கள் நடத்தும் யாகத்தால் தான், தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அவிர்பாகம் (உணவு) கிடைக்கிறது என்று இறுமாப்பு கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க சிவன் பிச்சை எடுக்கும் கோலத்தில் அங்கு வந்தார். அவரது அழகு கண்ட ரிஷிகளின் துணைவியர் தங்களை மறந்து அவர் பின்னாலேயே சென்றனர். இது கண்டு அதிர்ந்த ரிஷிகள், யாக குண்டத்தில் இருந்து விஷம் மிக்க பாம்புகளை ஏவி விட்டனர். அவற்றை எல்லாம் சிவன், தன் தலை முதல் பாதம் வரை ஆபரணமாகச் சூடிக் கொண்டார். இதன் அடிப்படையில், கோவிலில் சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகப்பாம்பினை ஆபரணமாக அணிவிக்கின்றனர்.