உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதைச் சொல்லும் பெரியவர்கள்!

நல்லதைச் சொல்லும் பெரியவர்கள்!

ஒரு தந்தை தன் மகன் கெட்ட வழியில் செல்வதைக் கண்டு மனதளவில் மிகவும் வருந்தினார். புத்திமதி சொல்லிப் பார்த்தார். அவன் காது கொடுத்து கேட்கவே இல்லை. அவனது ஒவ்வொரு செய்கையும், இயேசுவின் கைகளில் அடிக்கப்பட்ட ஆணியைப் போல் அந்த தந்தையின் இதயத்தில் தைத்தது. ஒரு சமயம், அந்த ஆணிகளையே அவனைத் திருத்தும் ஆயுதமாக்கினார் தந்தை. அவன் ஒவ்வொரு தவறு செய்யும் போதும் அருகில் இருந்த மரத்தில் ஒரு ஆணியை அடித்தார். இப்படியே ஐநுõறுக்கும் மேற்பட்ட ஆணிகள் பதிந்து விட்டன. மரத்தில் இருந்து பிசின் கசிந்தது. பார்ப்பதற்கு  அம்மரம் அழுவது போல் தோன்றியது. தந்தையின் இந்த செயலைப் பார்த்து மகன் ஆச்சரியப்பட்டான். “ஏன் இந்த மரத்தில் ஆணியடித்து நாசப்படுத்துகிறீர்கள். அதில் வழியும் பிசின், அம்மரம் அழுவது போன்ற தோற்றத்தை உண்டாக்கவில்லையா? அதன் உருவம் விகாரமாகவில்லையா? என்றான். தந்தை சொன்னார், “மகனே! நீ ஒவ்வொரு தவறு செய்யும் போதும் என் இதயத்தில் ஆணி அடிக்கப்பட்டது போல் இருக்கும். அதைக் குறிப்பிட்டுக் காட்டவே இம்மரத்தில் ஆணியடிப்பேன். இம்மரம் அழுவது போல், என் இதயமும் உன் செய்கை என்ற ஆணியின் குத்தலைத் தாங்காமல் அழுகிறது, என்றார். அன்றே மனம் மாறிய அவன், அம்மரத்துக்கு தண்ணீர் விட்டான்.  இயேசுவிடம் தான் செய்த பாவங்களுக்காக மனமுருகி மன்னிப்பு கேட்டான். ஒவ்வொரு முறை அழும்போதும் ஒவ்வொரு ஆணியாய் பிடுங்கினான். இப்போது மரத்தில் பிசின் வடிவது நின்று  விட்டது. அவனது தந்தையும் மகிழ்ந்தார். ஒரு கட்டத்தில் அவர் இறந்து விட்டார். அவர் ஆணியடித்த மரத்திலுள்ள வடு மட்டும் மாறாமல் அப்படியே இருந்து, அம்மனிதனை குத்திக்காட்டிக் கொண்டே இருந்தது. தவறு செய்வது மனித இயல்பு. ஆனால், பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு திருந்தி விட்டால் இயேசு மகிழ்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !