மொண்டிபாளையம் கோவிலில் புரட்டாசி திருவிழா
அன்னூர்:மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா நாளை (24ம் தேதி) நடக்கிறது.மேலத்திருப்பதி என்றழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் பழமையானது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். இவ்விழாவில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கியது. இரண்டாவது சனிக்கிழமை திருவிழா வரும் 24ம் தேதி நடக்கிறது. அதிகாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகமும், திருமஞ்சனமும் நடக்கிறது. பகல் 12.00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு அலங்காரத்தில், கருட வாகனத்தில் பெருமாள் திருவீதியுலா நடக்கிறது. கோவை, அன்னூர், திருப்பூர், அவிநாசி மற்றும் புளியம்பட்டியிலிருந்து மொண்டிபாளையத்திற்கு, அரசு போக்குவரத்துக் கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் விஸ்வநாதன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.