ஆபத்தான நிலையில் சிவன் கோயில்: பூஜை நிறுத்தம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ராமேஸ்வரம் கோயில் கட்டுப்பாட்டில் இருந்த பழமையான சிவன் கோயில், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மும்முடிசாத்தான் ஊராட்சியில், மிகவும் பழமை வாய்ந்த பெரிய நாகேஸ்வரர் என்ற ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்மன் கோயில் உள்ளது. பல நுாற்றாண்டை கடந்த இந்த கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ராமேஸ்வரம் கோயிலில் வழிபட்டபின் இவ்வழியே வந்த போது, இங்குள்ள ராமநாதசாமி கோயிலில் முடி சூட்டிக்கொண்டதாகவும், அதனாலேயே இந்த கோயில் இருந்த இந்த ஊருக்கு முன்பு ‘மும்முடி தரித்தான்’ என்ற பெயர் இருந்துள்ளது. காலப்போக்கில் இது மும்முடிசாத்தான் என மருவியுள்ளது.
இந்த கோயில் சுற்றுப்பகுதியில் உள்ள பாண்டியூர், தியாகவன்சேரி, சேதுக்கால், மணிசந்தல் உள்ளிட்ட கிராம மக்கள் கோயிலுக்கு மன்னர்களுக்கான பங்காக செலுத்தும் நெல் சேமிக்கப்பட்டுள்ளது. அதற்காக இரண்டு பெரிய நெற்களஞ்சியங்கள் இருந்துள்ளன. இங்கு சேகரிக்கப்படும் நெல் ராமேஸ்வரம் கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் சார்பில், இந்த கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கோயிலில் எந்த பராமரிப்பு பணிகளும், பூஜையும் நடக்கவில்லை. இதனால் கோயில் பாழடைந்து கிடக்கிறது. சுற்றுச்சுவர், மண்டபம், மூலஸ்தானம் என அனைத்து பகுதிகளும் சேதமடைந்து இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. பூஜைகள் நிறுத்தப்பட்டதால், இவ்வூர் இளைஞர்கள் ஊரில் பணம் வசூல் செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.
கே.முத்தழகு, முன்னாள் ஊராட்சி தலைவர்: கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அப்போது, சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கவில்லை. கோயிலுக்கு பூஜாரியும் இல்லை. பூஜையும் இல்லை. கோயிலை புதுப்பித்து பூஜைகள் செய்ய வேண்டும், என்றார். கே.நடராஜன்: கும்பாபிஷேகம் நடத்தவும், முதல்வரின் அன்னதான திட்டத்தில் கோயிலை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
செல்வராஜ், ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர்: பழமையான இந்த கோயிலின் பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். புதுப்பிக்கும் பணிகளை இன்னும் ஒருவாரத்திற்குள் துவக்கிவிடுவோம். பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.