கோட்டை மாரியம்மன் கோவிலில் விடிய, விடிய பொங்கல் வைத்த பக்தர்கள்!
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவையொட்டி, விடிய, விடிய பொங்கல் வைத்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகையொட்டி, நேற்று, தங்ககவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு முதல், ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்தும், உருளுதண்டம் போட்டும் அம்மனை வழிபட்டனர். அதேபோல், களரம்பட்டி பாலநாகமாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், பொன்னமாபேட்டை புத்துமாரியம்மன் கோவில், அம்மாபேட்டை பலப்பட்டரை மற்றும் செங்குந்தர் மாரியம்மன் கோவில், பட்டை கோவில் சின்னமாரியம்மன் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மாவட்டத்தில், நேற்று உள்ளூர் விடுமுறை என்பதால், ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால், பழையபஸ் ஸ்டாண்ட், வணிக வளாகம் உட்பட கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
* ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 6 மணிக்கு, கோவில் தலைமை பூசாரி அக்னி சட்டி ஏந்தி, குண்டம் இறங்கி, பூ மிதித்தலை துவக்கிவைத்தார். தொடர்ந்து, விரதமிருந்த பெண்கள், குழந்தைகள் என, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். மாலை, 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாரியம்மன் தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன், திருத்தேரை வடம் பிடித்து இழுத்துவந்தனர். முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் வந்த தேர், கோவிலை வந்தடைந்தது.
* பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, அபிநவம், அத்தனூர் அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை, 6 முதல், 7.30 மணி வரை, அம்மன் உற்சவமூர்த்திகள், ரதம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 9 மணிக்குமேல், இரு தேர்களையும் ஒன்றன்பின் ஒன்றாக, கிராமத்தின் முக்கிய வீதிகளில், பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
* பனமரத்துப்பட்டி அருகே, ச.ஆ.பெரமனூரில் உள்ள பச்சியம்மன் கோவிலில், நேற்று மாலை, 3 மணிக்கு, மானியக்காடு கிணற்றில் பக்தர்கள் நீராடி, பூஜை செய்து, கையில் காப்பு கட்டினர். பின், அக்னி குண்டத்தில் இறங்கும் பக்தர்களை சாட்டையில் அடித்து, ஆசி வழங்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலம் சென்று, கோவில் எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், பக்தி பரவசத்துடன் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சாமி ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவிலை வந்தடைந்தது.
* குகை, மாரியம்மன், காளியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை பெருவிழா, கடந்த 26ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 5 மணியளவில், பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 10 மணிக்கு மேல், சூரர்களை சம்ஹாரம் செய்து, காளியம்மன் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின், காளியம்மனுக்கு மஞ்சள்பாவாடை அணிவித்தனர். மாலை, 4 மணியளவில், காளியம்மன் சக்தி கிரகம் கோவிலை வந்தடைந்ததும், பக்தர்கள், அக்னி குண்டலத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தீவட்டிப்பட்டியை சேர்ந்த பெண் பக்தை ரேணுகா, குண்டத்தில் இறங்கி ஓடியபோது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில், அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
* அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், கண்ணாடி மாளிகையில், 30 தெய்வங்கள் வைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று, கோவிலில் தீ மிதி விழா நடந்தது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
* தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் முதல் நாளான, 8ம் தேதி, 1,008 தீர்த்தக்குடங்களுடன், வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக, பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். நேற்று, கண்ணனூர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, அம்மனை வழிபட்டனர்.