சென்னிமலையில் கழிவு ஆடித் திருவிழா: கோலாகல கொண்டாட்டம்
சென்னிமலை: சென்னிமலை பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் பழமையான, கழிவு ஆடித் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னிமலை பகுதியில், பல ஆண்டுகளாக நெசவுத்தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில், சாயப்பட்டறைகளும் அதிகம். இதில் பணிபுரியும், தொழிலாளர்கள் 3,000 பேர் வரை உள்ளனர். சாயப்பட்டறைகளில், ஆடி மாதம் கடைசி புதன்கிழமையில், கழிவு ஆடிதிருவிழா கொண்டாடப்படுகிறது. இதன்படி, நேற்று, சென்னிமலை பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் சுத்தம் செய்யப்பட்டு, வண்ணம் பூசி ஜொலித்தது. முதலாளிகளும், தொழிலாளர்களும் சேர்ந்து, பட்டறையில் பொங்கல் வைத்து, அங்குள்ள கிட்டி மரத்தை அலங்கரித்து, பூஜை செய்தனர். மதியம் கறி விருந்து வைத்து அனைவருக்கும் பரிமாறினர். இந்த விழாவை முன்னிட்டு சென்னிமலை பகுதியில் லோக்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கழிவு ஆடித் திருவிழா சற்று உற்சாகம் குறைந்தே காணப்பட்டது. ரிவர்ஸ் ஆஸ்மாஸ் சிஸ்டம் என்ற முறையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என, கோர்ட் உத்தரவுட்டுள்ளது தான் இதற்குக் காரணம் என, தனியார் சாயப்பட்டறை முதலாளிகள் கூறினர். இருந்தாலும் உற்சாகத்திற்கு ஒன்றும் குறைவில்லாமல் கழிவு ஆடித் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.