அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தேனி: ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம்செய்தனர்.
ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு (ஆக.,12 ) உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிக எண்ணிக்கையில் பெண்கள் குவிந்தனர். ஞானாம்பிகை அலங்காரத்தில் காட்சியளித்தார்.
கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து கவுமாரியம்மன் கோயில், சாமாண்டியம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றனர்.
பெரியகுளம்: பெரியகுளம் பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் தங்கள் கணவருக்கு தீர்க்க ஆயுள் வேண்டி தாலி கயிறுகளுக்கு குங்குமம், மஞ்சள் வைத்துக்கொண்டனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், மாரியம்மன் கோயில், தென்கரை காளியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், கிருஷ்ணவேணி அம்மாள் கோயில், வீச்சு கருப்பணசாமி கோயில், சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயில், தாமரைக்குளம் சீலைக்காரி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கேப்பைக்கூழ் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
தேவாரம்: தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்த அம்மனுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் படைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
போடி: குலாலர்பாளையம் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். போடி சவுடேஸ்வரி அம்மன் கோயில், நந்தவனம் காளியம்மன் கோயில், புதுக்காலனி சந்தனமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தர வேலவர் கோயிலில் மகாலட்சுமி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விரதம் இருந்த ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜை நடத்தினர். வளையல், தாலிக்கயிறு, குங்குமம், பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. கூடலுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பிரசாதமாக கூழ், பொங்கல், பூ, வளையல், தாலிக்கயிறு வழங்கப்பட்டது.