உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி கோவில் விழாக்களில் நாடகங்களுக்கு வரவேற்பு: தெருக்கூத்து கலைஞர்கள் மகிழ்ச்சி

தர்மபுரி கோவில் விழாக்களில் நாடகங்களுக்கு வரவேற்பு: தெருக்கூத்து கலைஞர்கள் மகிழ்ச்சி

தர்மபுரி: கோவில் திருவிழாக்களில் தெருக்கூத்துக்கு தொடர்ந்து வரவேற்பு ஏற்பட்டு வருவதால், தெருக்கூத்து கலைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாண்டவர்கள் வனவாசம் இருந்த போது, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளுக்கும் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திரௌபதியம்மன், தர்மர் கோவில்கள் பல பகுதிகளில் உள்ளன. இந்த கோவில் திருவிழாக்களில் மட்டும் இன்றி, மாவட்டங்களில் உள்ள மாரியம்மன், முருகன், பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நடக்கும் விழாக்களில், மஹாபாரதம், பாரத யுத்தம், அர்ஜூணன் தபசு மற்றும் வள்ளி, தெய்வானை, பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட நாடங்களை, விழாக்குழுவினர் இன்றளவும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த வைகாசி மாதம் முதல், தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. தர்மபுரி அடுத்த மூங்கிலான்கொட்டாயில் சக்தி மாரியம்மன் கோவில் விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு அர்சுணன் தபசு நாடகம் நடந்தது. இந்நாடகத்தை கிராம மக்கள் மற்றும் குழந்தைகள், விடிய, விடிய ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து, பிக்கிலி முத்தங்கி நாடக்குழுவை சேர்ந்த சிவன் கூறியதாவது: கோவில் திருவிழாக்களில் பாட்டுக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் விழாக்களில் தொடர்ந்து அர்ஜூணன் தபசு, மஹாபாரதம், வள்ளி தெய்வானை நாடகம் உள்ளிட்டவை நடத்துவதில், விழாக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இம்மாவட்டங்களில் தெருக்கூத்து கலை தொய்வின்றி வளர்ந்து வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நாங்களும் புதிய கலைஞர்களை உருவாக்கி, இக்கலையை வளர்த்து வருகிறோம். தற்போது, குழந்தைகள் மத்தியிலும் எங்கள் கலைக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நாடகம் நடக்கும் தூரத்திற்கு தகுந்து கட்டணம் நிர்ணயிக்கிறோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !