திருத்தணி தணிகை மீனாட்சியம்மன் கோவிலில் ஜாத்திரை விழா
திருத்தணி: தணிகை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருத்தணி நகர் முழுவதும் ஜாத்திரை விழா நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி, பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில், நேற்று, ஜாத்திரை விழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு, பூ கரகம், புறவழிச் சாலையில் இருந்து ஊர்வலமாக, தணிகை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்கு வந்தடைந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், திருத்தணி நகர் முழுவதும் உள்ள மேட்டு தெரு எல்லையம்மன், அக்கைய்யாநாயுடு சாலை தணிகாசலம்மன், எம்.ஜி.ஆர்., நகர் எல்லைஅம்மன், பெரியார் நகர் அம்மன், சுப்ரமணிய நகர் துர்க்கையம்மன் உட்பட அனைத்து அம்மன் கோவில்களிலும்,, காலையில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, அம்மன் ஊர்வலம் மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது.