லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு
விழுப்புரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருபவித்ர உற்சவம், நேற்றுடன் நிறைவு பெற்றது. விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், திருபவித்ர உற்சவம் கடந்த 14ம் தேதி துவங்கியது. இதையொட்டி, 13ம் தேதி இரவு சிறப்பு பூஜைகளுடன், முதல்கால யாக பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து, 14ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், உற்சவர் மூர்த்திகளுக்கு திருமஞ்சனம், ஹோமம், பூர்ணாஹூதி, மூலவர், உற்சவர்களுக்கு பவித்ர மாலை சாற்றும் வைபவம், வேத பிரபந்த பாராயணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் நான்காம் கால யாக பூஜை நடந்தது. நிறைவு நாளையொட்டி, நேற்று பகல் 12.00மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை நடந்தது. இரவு 7.00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, இரவு 8.00 மணிக்கு பவித்ர மாலை களைதல், 9.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்,10.00மணிக்கு சயனாதிவாசம் நிகழ்ச்சியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை, கோவில் செயல்அலுவலர் மணி, பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.