உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தரிசனம் சுலபமல்ல!

திருமலை செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தரிசனம் சுலபமல்ல!

திருமலை : புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி, திருமலைக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள் பலர், சாமி தரிசனம் செய்யமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். திருமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்ககான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வருவர். பொதுவாக பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் தரிசனம் கிடைத்துவிடும். ஆனால், நேற்று முன்தினம் (24ம் தேதி) முதல் சனிக்கிழமை பாதயாத்திரை வந்த பக்தர்கள் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில் இருந்தது. இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பலரும், பாதயாத்திரையாக வந்திருந்தனர். 50 ரூபாய் கட்டணத்திற்கான சுதர்சன டோக்கன்கள் திருப்பதியில் காலையில் மட்டும்தான் வினியோகிக்கப்படுகிறது. இதனால், திருப்பதி வரும் பெரும்பாலானவர்கள் பாதயாத்திரை வந்தால் விரைவில் சாமி தரிசனம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், பாதயாத்திரைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதன் காரணமாக, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு வழியாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு, இப்போது முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை. ரூ.300 கட்டணத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தும், அதிகாரிகள் அதை கண்டு கொள்வது இல்லை.

முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம் மாலை 6.30 மணி முதல் பாதயாத்திரை வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள், எப்படியும் தரிசனம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர். ஆனால், திடீரென இரவு 11 மணிக்கு, தேவஸ்தான அதிகாரிகள் விடுத்த அறிவிப்பில், பாதயாத்திரை தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்குத்தான் அனுமதிக்கப்படுவர் என்று கூறியதால், பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த அறிவிப்பை 6 மணிக்கு வெளியிட்டு இருந்தால், 300 ரூபாய் கட்டணத்தில் போய் சாமி பார்த்து இருப்போம். இப்போது, முதல் சனிக்கிழமையன்று சாமியை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டனர். பிரம்மோற்சவம், வரும் 29ம் தேதி துவங்குகிறது. 29ம் தேதி முதல் அக்., 7ம் தேதி வரை ரூ.50 மற்றும் ரூ.300 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சாமி தரிசனம் பார்ப்பது கஷ்டம் என தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நாட்களில், கோவிலுக்கு வெளியே நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க மட்டும் பக்தர்கள் வந்தால் நன்றாக இருக்கும். மூலவரை எத்தனை மணி நேரத்தில் பார்க்க முடியும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது. பாதயாத்திரை பக்தர்கள் தரிசனம் பார்க்க பத்து மணி நேரம் ஆகும் என தேவஸ்தான ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !