திரவுபதி அம்மன் கோவிலில் 21ம் தேதி தீ மிதி திருவிழா
ADDED :3384 days ago
புல்லரம்பாக்கம்: புல்லரம்பாக்கத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், வரும், 21ம் தேதி, தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில், தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. திருவிழாவின் நான்காவது நாள் உற்சவத்தை முன்னிட்டு, அர்ஜுனன் - சுபத்திரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின், தம்பதி சமேதராக, புல்லரம்பாக்கம் கிராம வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா வரும், 21ம் தேதி, மாலை, 5:00 மணியளவில் நடக்கிறது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு மேல் திரவுபதி அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.