ஆண்டு முழுவதும் சபரிமலை தரிசனம்: திருப்பதி மாடலில் டிக்கெட் * கேரள முதல்வர் யோசனைக்கு தேவசம்போர்டு எதிர்ப்பு
சபரிமலை: ஆண்டு முழுவதும் சபரிமலை நடை திறக்க வேண்டும் என்றும், தரிசனத்துக்கு திருப்பதி மாடலில் டிக்கெட் ஏற்படுத்தலாம் என்று கேரள முதல்வர் சொன்ன யோசனையை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அந்த மேடையிலேயே நிராகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலையில் நவம்பரில் தொடங்க இருக்கும் மண்டல காலத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் நிரந்தரமாக செய்யப்பட வேண்டிய வசதிகள் பற்றி ஆய்வு செய்ய கேரள முதல்வர் பிணறாயி விஜயன், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பரிவாரங்களுடன் நேற்று காலை பம்பை வந்தார். அவரை தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். விருந்தினர் மாளிகையில் உயர் அதிகாரிளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பம்பை ஆஞ்சநேயா ஆடிட்டோரியத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் பேசியதாவது: சபரிமலையில் விஐபி கியூ தரிசன முறையை நிறுத்த வேண்டும். ஆண்டு முழுவதும் நடை திறப்பது பற்றி தேவசம்போர்டு ஆலோசிக்க வேண்டும். திருப்பதி மாடலில் ஆயிரம், 1200 ரூபாய் அளவில் டிக்கெட் போட்டு தரிசனத்தை முறைபடுத்த வேண்டும். ரோப்வே அமைக்கும் போது அது பொருட்களை கொண்டு செல்வதற்கு மட்டுமல்லாமல் பக்தர்களும் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். சபரிமலை வரும் பக்தர்களுக்கு வசதியாக ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். சபரிமலை பாதையில் ஒவ்வொரு 50 கி.மீ. தூரத்திலும் தங்கும் விடுதி கட்ட வேண்டும். சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை கேமரா அமைத்து போலீசார் எண்ண வேண்டும். பம்பையில் இருந்து சன்னிதானம் வந்து செல்வதற்கு கூடுதல் பாதைகள் அமைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார். பின்னர் பேசிய திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன் முதல்வரின் கருத்துக்களை நிராகரித்தார். அவர் கூறியதாவது: சபரிமலையில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப நடை திறக்கமுடியாது. இங்கு ஐயப்பன் தியானநிலை பிரதிஷ்டையில் இருக்கிறார். அதனால் ஆண்டு முழுவதும் நடை திறப்பது சாத்தியமில்லை. இதுபோன்ற விஷயங்களில் தேவபிரஸ்னம் நடத்திதான் முடிவு எடுக்க முடியும். சபரிமலையில் விஐபி கியூ இல்லை என்றும், 500 ரூபாய்க்கு மேல் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டும் சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது.
சபரிமலையில் பகவானும் பக்தனும் ஒன்றாக கருதப்படுவதால் தரிசனத்துக்கு கட்டணம் வசூலித்து பாஸ் வழங்குவது சாத்தியமில்லை. சபரிமலையில் வருவோர் போவார் எல்லாம் வந்து ஆதாயம் தேட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பின்னர் பதிலளித்த முதல்வர் தேவசம்போர்டு தலைவர் வார்த்தைகளில் அரசியல் உள்ளது என்று குற்றம் சாட்டினார். இவ்வாறு மீட்டிங் பரபரப்புடன் முடிந்த பின்னர் , முதல்வர் காதில் படும் படி கோபாலகிருஷ்ணன், நான் பக்தர்களுடன் நிற்பேன் என்றும், தேவைப்பட்டால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் கூறினார். உடனே முதல்வர் உங்கள் காலம் மூன்று ஆண்டுகள் மட்டும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார். முதல்வர்வரும், தேவசம்போர்டு தலைவரும் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.