உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்த்தசாரதி கோவிலில் மகா சம்ரோக் ஷணம்:ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

பார்த்தசாரதி கோவிலில் மகா சம்ரோக் ஷணம்:ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், யோக நரசிம்மர் சுவாமி, குளக்கரை ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு, அஷ்ட பந்தன மகா சம்ரோக் ஷணம் விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவில் எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. திவ்ய தேசங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள யோக நரசிம்மர், வரதராஜ சுவாமி, திருமழிசை ஆழ்வார், கருட ஆழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் சன்னிதிகள், அதன் விமானங்கள், பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம் உள்ளிட்டவற்றிற்கு, கடந்த ஜூலை 10ம் தேதி, 95 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் துவங்கின.

அதில், முதன் முறையாக நரசிம்ம சுவாமிக்கு சொர்ணப்பந்தனமும், கஜேந்திர வரதராஜ சுவாமிக்கு ரஜத பந்தமும் பொருத்தப்படவுள்ளன. திருப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த 18ம் தேதி யாகசாலை துவங்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்பட்டன. நேற்று அதிகாலை, விசுவரூப தரிசனம் நடந்தது. அதை தொடர்ந்து எட்டாவது கால ஹோமம், திவ்வ பிரபந்த சேவை, பூர்ணாஹுதி நடந்தன. காலை, 10:15 மணிக்கு கோபுர கலசங்களில் கும்பநீர் சேர்க்கப்பட்டு, அஷ்டபந்தன மகா சம்ரோக் ஷணம் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக காவல்துறை, சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !