கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் கோலாகலம்
சேலம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சவுடேஷ்வரி அம்மன் கோவிலில், நேற்று உறியடி உற்சவம் நடந்தது. சேலம், குகையில் உள்ள சவுடேஷ்வரி அம்மன் கோவிலில், இரு நாட்களாக, கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நேற்று, உறியடி உற்சவம் நடந்தது. அதில், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். 5 மணி நேரத்துக்கு மேல் நடந்த நிகழ்ச்சியை, ஏராளமானோர் கண்டுகளித்தனர். முன்னதாக, கோவிலில் இருந்து, கிருஷ்ணர் சுவாமி, தேரில் திருவீதி உலா வந்தார்.
* ஆத்தூர், கோட்டை பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நேற்று மாலை, 7 மணியளவில், தேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, குதிரை வாகனத்தில், வீதி உலா நடந்தது. பின், கோவில் வளாகத்தில், உறியடி விழா நடந்தது. அதேபோல், ஆத்தூர், முல்லைவாடி, வேணுகோபால்சுவாமி கோவிலில், உறியடி விழா நடந்தது. அதில், ஆத்தூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.