உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாளய அமாவாசை: குவிந்த பக்தர்கள்!

மகாளய அமாவாசை: குவிந்த பக்தர்கள்!

திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளக்கரையில், மகாளய அமாவாசையான இன்று, திரளான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதையடுத்து, கோவில் குளம் தூர்வாரி புதிதாக தண்ணீர் நிரப்பி, தயார் நிலையில் உள்ளது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத அமாவாசையன்று ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, ஏராளமான பக்தர்கள் குவிவது வழக்கம். இக்கோவிலுக்கு, இன்று தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று மகாளய அமாவாசை என்பதால், நேற்று மாலையே பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்கியுள்ளனர். இவர்கள், இன்று காலை கோவில் குளத்தில் நீராடி, குளக்கரையில் இருக்கும் புரோகிதர்களிடம், தங்களது முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்வார்கள். கோவில் குளக்கரையில் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலிலுக்கு வரும் பக்தர்களுக்கு, குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !