உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.2.25 லட்சம்

பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.2.25 லட்சம்

ஊத்துக்கோட்டை : சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், கடந்த 45 நாட்களில் உண்டியல் மூலம், இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 677 ரூபாய் வருவாய் வந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. சிவபெருமான் அனைத்து சிவாலயங்களிலும், லிங்க ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள சுருட்டப்பள்ளியில் அமைந்துள்ள பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், உலகை காக்க வேண்டி ஆலகால விஷத்தை உண்டு, அன்னை பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து உறங்குவது போன்று உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள மரகதாம்பிகை தாயார், வால்மிகீஸ்வரர் சன்னிதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சத்தியவேடு சரக கோவில் மேனேஜர் துர்காபிரசாத், கோவில் அறங்காவலர் குழு தலைவர் முனிசேகர் ரெட்டி, கோவில் மேனேஜர் முனிகிருஷ்ணய்யா ஆகியோர் முன்னிலையில் ஊத்துக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள், கோவில் ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 677 ரூபாய் மற்றும் ஒரு கிராம் தங்கம் இருந்தது. இது கடந்த 45 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !