வேளாங்கண்ணி ஆலயத்தில் நலம்பெறும் விழா
சென்னை: வேளங்கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டு பெருவிழாவின், நலம் பெறும் விழாவில், உடல் நலம் குன்றியவர்கள் நலம் பெற சிறப்பு ஜெபம் நடந்தது. வேளங்கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டு பெருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் நேற்று, நலம் பெறும் விழா நடந்தது. காலை, 5:30 மணிக்கு திருப்பலிகள் துவங்கின. கண்டிகை, பங்குத்தந்தை ஜூடு பிரகாசம், பேராசிரியர் போஸ்கோ ஆங்கிலத்திலும், எண்ணுார் பங்குத்தந்தை பால்ராஜ் தமிழிலும் திருப்பலி நிகழ்த்தினர். மாலை செபமாலை, நவநாள், செபம், கூட்டுத்திருப்பலி ஆகியவை நிகழ்ந்தன. மாலை நடந்த நலம் பெறும் விழாவில் திருவொற்றியூர் பங்குத்தந்தை பால்ராஜ், அண்ணாநகர் பங்குத்தந்தை தாமஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலியில் கூறியதாவது: பெற்றவர்களை மறந்தவர்கள் இறந்தவர்களுக்கு சமம். நற்சுகம், சவுக்கியம் தந்த தாயை என்றும் நினைத்து பார்க்க வேண்டும். இறைவன் யாரை தொட்டாலும், யார் இறைவனை தொட்டாலும் சுகம் பெற்றுவர். உடல் நலம் குன்றியவர்களுக்காகவும்; நாட்டு மக்களுக்காக பணி செய்பவர்களுக்காவும் ஜெபிப்போம். உலகில் மருத்துவர்கள், செவிலியர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுவோம். தற்போது, வன்முறை, தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. அதில், இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு நல்வழிப்படுத்த இறைவனை வேண்டுவோம். அனைவரும் நலமுடன் வாழ பிராத்திப்போம். இவ்வாறு திருப்பலி நிகழ்த்தினர். ஆலய பெருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் திருவிழா நடக்கிறது.