உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தேர் நிறுத்திய இடம் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அங்கலாய்ப்பு

திருவொற்றியூர் தேர் நிறுத்திய இடம் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அங்கலாய்ப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான சுந்தர விநாயகர் கோவிலைச் சுற்றியுள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் தேரை அந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், 1941ஆம் ஆண்டுக்கு பிறகு தேர் ஓடியதாக வலராறு இல்லை.  எனவே, கோவிலுக்கென தனித்தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு, 2015ம் ஆண்டு கோவில் தேர் செய்து முடிக்கப்பட்டது. 41 அடி  உயரத்தில் 46 லட்சம் ரூபாய் மதிப்பில், அழகுற செய்யப்பட்டிருந்த தேர், கடந்த மாசி பிரம்மோற்சவத்தின் போது, சுவாமியுடன் தேர் மாட  வீதிகளை சுற்றி வந்தது.

சேதமாகும் தேர்!
: கடந்த, 75 ஆண்டுகளுக்கு பின், தேர் செய்யப்பட்டதே தவிர, அதற்கென ஷெட் அமைத்து முறையாக  பராமரிக்கவில்லை. கோவில் நுழைவாயில் அருகே, காலி இடத்தில் நிறுத்தபட்டிருந்த தேர், வெயில் மற்றும் மழையில் சேதமடைய  தொடங்கியது.  பக்தர்கள் நெருக்கடி கொடுத்ததைத் தொடர்ந்து, தேர் ராட்சத தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டது. தார்ப்பாய்களும்  நாளடைவில் கிழியத் தொடங்கின. இதனால், தேருக்கு தனியாக ஷெட் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது. அதனை  தொடர்ந்து, ஷெட் அமைக்க கோவில் குளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது.  ஆனால், அந்த இடத்துக்கு எதிரே, கழிப்பறையும்,  பக்கவாட்டில் காரியம் மேடையும் உள்ளதால், புனிதமான கோவில் தேரை அங்கே நிறுத்தக் கூடாது என்று பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு  கிளம்பியது. இதற்கு மாற்றாக, பழைய கோவில் தேர் நின்ற சுந்தர விநாயகர் கோவில் அருகே, புதிய தேரை நிறுத்த வேண்டும் என  கோரிக்கை எழுந்தது.  அந்த இடத்தில் கோவிலை மறைக்கும் அளவிற்கு, தற்போது ஆக்கிரமிப்புகள் வந்து விட்டன. கடைகள்,  மருத்துவமனைகள், வீடுகள் கட்டி, வாடகைக்கு விட்டு சிலர் சம்பாதித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து, கடந்த வாரத்தில்  அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வாய் திறக்க மறுப்பு: இணை ஆணையர் பரஞ்சோதி, துணை ஆணையர் வான்மதி ஆகியோர், சுந்தர விநாயகர் கோவில் அருகே உள்ள  ஆக்கிரமிப்புகளை நேரில் பார்த்தனர். ஆவணங்களையும் பரிசீலித்தனர்.  அதில், அந்த இடத்தில் அப்பட்டமான ஆக்கிரமிப்பு இருப்பது  உறுதியாகியுள்ளது. கோவில் நிர்வாகம் தரப்பில் இதுபற்றி வாய் திறக்க மறுக்கின்றனர். ஆனால், தேர் நிறுத்துவதற்கு, இந்த இடம்  மீட்கப்படும் வரை, ஊர் வாயை அவர்களால் மூட முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !