ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை ஈத்கா மைதானங்களில் தொழுகை
ராமநாதபுரம்: பக்ரீத் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் மாவட்ட ஈத்கா மைதானங்களில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். ராமநாதபுரம் - மதுரை ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை, சின்ன முஹலம் ஜமாத் இமாம் ஷபியுல்லா ஆலிம் தலைமையில் நடந்தது. பாசிபட்டரை தெரு பள்ளிவாசல் இமாம் அப்துல் காதர் குத்பா ஓதினார். உலக அமைதி வேண்டி காதர் பள்ளிவாசல் இமாம் முகைதீன் அப்துல் காதர் துவா செய்தார். பெரிய முஹலம் ஜமாத் பள்ளிவாசல் இமாம் அகமது இபுராஹீம் ஒருங்கிணைத்தார். புத்தாடை அணிந்த முஸ்லிம்கள் ஒருவரை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். பாரதி நகர் பாரி ஆலிம் பள்ளிவாசலில் இமாம் செய்யது பைஸ் தலைமையில், அப்துல் பாரி ஆலிம் முன்னிலையில் தொழுகை நடந்தது. மதரஸாக்கள், தனியாக அமைக்கப்பட்ட இடங்களில் நடந்த தொழுகையில் முஸ்லிம் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பனைக்குளம், புதுவலசை, சித்தார்கோட்டை, அத்தியூத்து, புதுமடம், மண்டபம், தர்காவலசை, வேதாளை, மரைக்காயர்பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் சிறுப்பு தொழுகை நடந்தது.