உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்த திருமறைநாத கோயில் தெப்பம்: நிதியிருந்தும் பராமரிக்க மனமில்லை

சிதிலமடைந்த திருமறைநாத கோயில் தெப்பம்: நிதியிருந்தும் பராமரிக்க மனமில்லை

திருவாதவூர்: மதுரை அருகே திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு இன்றி சிதலமடைந்து வருகிறது. சீரமைக்க தேவையான நிதியிருந்தும் கோயில் நிர்வாகம் பணிகளை நடத்தவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்கள் பல உள்ளன. இதில் திருவாதவூர் வேத நாயகி அம்பாள் சமேத திருமறைநாத சுவாமி கோயில் முக்கியத்துவம் வாய்ந்தது. பழைமையும் புராதன சிறப்பும் மிக்க திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்தார். திருமறைநாத சுவாமி கோயில் அருகில் மாணிக்கவாசகருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. வெளிமாநில யாத்ரீகர்கள் ஏராளமானோர் திருமறைநாத கோயில், மாணிக்கவாசகர் கோயிலுக்கு வருவதுண்டு. திருமறைநாத சுவாமி கோயில் எதிரே உள்ள பழமையான தெப்பக்குளத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

சிதிலமடைந்த தெப்பம்:
கோயில் நிர்வாகம் பல ஆண்டுகளாக தெப்பக்குளத்தை பராமரிக்காமல் கை விட்டது. இதனால் தெப்பத்துக்கு வரும் நீரூற்று பாதைகள் அடைபட்டன. தெப்பத்தின் நீர் வரத்து அடியோடு நின்றது. பின் குழாய் மூலம் தெப்பத்தில் தண்ணீர் நிரப்பினர். எனினும் முறையான பராமரிப்பு இல்லாததால் தெப்பத்தில் தேக்கப்பட்ட நீர் கழிவுநீரானாது. கடும் துர்நாற்றம் வீசியதால் தெப்பத்தை யாத்ரீகர்கள் பயன்படுத்தவில்லை. தற்போது தெப்பத்தை சுற்றிலும் புதர் மண்டியது. கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. தெப்பத்தின் சுற்றுச்சுவர் கற்கள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. தெப்பத்தை சுற்றிலும் திறந்த வெளி கழிப்பிடமாக்கி விட்டனர்.

நிதி இருந்தும் மனமில்லை
: திருமறைநாத சுவாமி கோயில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரித்து சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. எனினும் கோயில் எதிரே உள்ள தெப்பக்குளத்தை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. சில லட்சம் ரூபாய் செலவிட்டிருந்தால் தெப்பம் புதுப்பொலிவு பெற்றிருக்கும். தெப்பத்தின் இடது புறத்தில் தேர் நிலையம் உள்ளது. வலது புறத்தை ஆக்கிரமித்து பஸ் ஸ்டாப் கட்டியுள்ளனர். மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் கார் பார்க்கிங் கட்டடம் மற்றும் குன்னத்துார் சத்திரம் கட்ட 12 கோடி நிதியை வழங்க மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் தயாராக உள்ளது. உப கோயிலான திருமறைநாத சுவாமி கோயிலின் தெப்பத்தை பராமரித்து தண்ணீர் தேக்க கோயில் நிர்வாகம் முன் வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !