சபரிமலையில் கியூ காம்ப்ளக்ஸ் அமைக்கும் பணி துவங்கியது!
சபரிமலை : சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக, கியூ காம்ப்ளக்ஸ் அமைப்பதற்காக இதுவரை இருந்து வந்த தடை நீங்கியதை அடுத்து, கியூ காம்ப்ளக்ஸ் அமைக்கும் பணிகள் துவங்கின. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் பிரசித்திப் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மண்டல மற்றும் மகர ஜோதி உற்சவ காலங்களில் கோடிக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சில நேரங்களில் பல மணிநேரம் மற்றும் இரு நாட்கள் என வரிசையில் காத்து நிற்கவேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு காத்திருக்கும்போது, உணவு, உறக்கம், இயற்கை உபாதைகள் ஆகியவற்றிற்காக பெரிதும் சிரமப்படும் நிலை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதை களையவும், பக்தர்கள் வசதியாக சுவாமி தரிசனம் செய்யவும், கியூ காம்ப்ளக்ஸ் (திருப்பதி மலையில் உள்ள வசதியைப் போன்றது) அமைக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்தது. இத்திட்டத்திற்காக, பம்பை - சபரிமலை பாதையில் சரங்குத்தி பகுதியில் இருந்து மரக்கூட்டம் வரை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பிலும், சபரிபீடத்தில் இருந்து மரக்கூட்டம் வரை சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழும் இரு கியூ காம்ப்ளக்ஸ்கள் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. இப்பணிக்காக, இப்பகுதியில் பல மரங்களை அகற்றவேண்டிய நிலை உள்ளது. இதில், சரங்குத்தி பகுதி முதல் மரக்கூட்டம் வரை கியூ காம்ப்ளக்ஸ் அமைக்க அவ்வழியில் உள்ள 53 சிறிய பட்டுப்போன மரங்கள் தடையாக இருந்தன. அம்மரங்களை வெட்டுவதற்காக, வனத்துறையிடம் அனுமதிகோரியும், இதுவரை கிடைக்காமல் இருந்ததால், பணிகளை துவக்கமுடியாமல் தடை ஏற்பட்டது.
இந்நிலையில், அம்மரங்களை வெட்டி அகற்றுவதற்காக வனத்துறைக்கு ஏழரை லட்சம் ரூபாயை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வழங்கியது. இதையடுத்து தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இங்கு சரங்குத்தி - மரக்கூட்டம் இடையே 80 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட கியூ காம்ப்ளக்ஸ் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் இரு பகுதிகளாக (பிளாக்குகளாக) கியூ காம்ப்ளக்ஸ் கட்டடங்கள் அமைய உள்ளது. பக்தர்கள் வசதியாக அமர்வதற்கு நாற்காலிகள் இவற்றில் இடம் பெறும். தற்காலிகமாக அமைப்பட உள்ள இக்காம்ப்ளக்சில், 48 தூண்கள் கொண்ட கட்டடத்தின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து அவற்றின் மீது பைபர் தகடுகளால் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. சபரிபீடம் முதல் மரக்கூட்டம் வரை, மாஸ்டர் பிளான் திட்டத்தின் மூலம் அமைக்க, உத்தேசிக்கப்பட்டுள்ள கியூ காம்ப்ளக்ஸ் பணிகளுக்கு தடையாக ஐந்து மரங்கள் உள்ளன. அவற்றை அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அங்கு பணிகள் துவங்குவதில் தடை இருந்து வருகிறது. மரங்கள் இல்லாத பகுதியில் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.