உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி: 50 பேர் பங்கேற்பு

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி: 50 பேர் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாகப்பட்டணம் மாவட்டத்தை சேர்ந்த, 50 பேர், உழவாரப்பணியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், 27 ஏக்கர் கொண்டது. ஒன்பது கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம் உட்பட, 75 க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான சன்னதிகள் உள்ளன. இங்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் போடும் குப்பை, பிளாஸ்டிக் கழிவு, கோவில் வளாகத்தில் மரங்களில் உள்ள இலைகள் கீழே உதிர்வதால் ஏற்படும் குப்பை ஆகியவற்றை, தினசரி கோவில் தற்காலிக ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். ஆனால் குறைந்த அளவே ஊழியர்கள் உள்ளதால், சுத்தப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது பல்வேறு பகுதிகளிலிருந்து உழவாரப்பணிகளை மேற்கொள்ள பக்தர்கள் வருகின்றனர். நேற்று நாகப்பட்டணத்தில் இருந்து, அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை சார்பில் வந்திருந்த, 50 பேர் கொண்ட குழுவினர், கோவில் வளாகத்தில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கோவில் வளாகத்தில் குப்பைகளை அகற்றி, நந்தவன பராமரிப்பு பணிகளை செய்தனர். மேலும் இவர்கள், இந்த கோவிலில் ஆண்டுக்கு, இரு முறை உழவாரப்பணி மேற்கொள்ள உள்ளதாகவும், கார்த்திகை தீப திருவிழா முடிந்தவுடன், மலையில் உள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் கழிவு, பிளாஸ்டிக் கழிவு ஆகியவற்றை அகற்ற வர உள்ளதாகவும் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !