மயானத்தில் சத்யசாயி பக்தர்கள் தூய்மை பணி அசத்தல்
திருப்பூர் : தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்ட சத்ய சாயி சேவா சமிதிகள் சார்பில், குமார் நகர் மயானம் தூய்மைப்படுத்தப்பட்டது. மத்திய அரசின், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதிகள் சார்பில், நாடு முழுவதும் தூய்மைப்பணி, நடந்தது. மாவட்டத்தில், திருப்பூர், அவிநாசி ரோடு, குமார்நகர் மயானமும், உடுமலை மற்றும் பொள்ளாச்சியிலுள்ள எரிவாயு மயானங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன. குமார் நகர் மயானத்தில், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான, 40 சாயி பக்தர்கள், மயானத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காலை, 9:00க்கு, ஸ்ரீ சத்சாயி பஜனையுடன் பணி துவங்கியது. மாயான பகுதி, புதர் மண்டியும், செடி, கொடிகளாலும், குப்பைகள் நிறைந்து கிடந்தது. முதல்கட்டமாக, குப்பையை அகற்றிய சாய்பக்தர்கள், பிறகு, செடி, கொடிகள், புதர்களை அகற்றினர். காலையில், புதர் மண்டிய காடு போல காட்சியளித்த மயானம், மாலையில் அழகிய பூங்காவாக மாறியுள்ளதாக, மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.