நவராத்திரி விழா துவங்கியது.. கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு!
திருப்பூர் : இந்துக்களின் முக்கிய வைபவங்களில் ஒன்றான நவராத்திரி விழா, நேற்று துவங்கியது; இதையொட்டி, கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில், முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜை நடை பெறுகிறது. தேவி மலை மகளாக இருந்து, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அகற்றி, இச்சா சக்தியை தருகிறார். அடுத்து மூன்று நாட்கள், லட்சுமியாக இருந்து, அனைத்து செல்வங்களை அருளும் கிரியா சக்தியை வழங்குகிறார். கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதியாக அருள் பாலித்து, நமக்கு ஞான சக்தியை வழங்குகிறார். நவராத்திரி விழாவின், 10வது நாள், விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு, கோவில்கள் மற்றும் வீடுகளில், கொலு பொம்மைகள் வைக்கப்படுகிறது. தினமும் பூஜை செய்து, சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்ளிட்டவற்றை நிவேனதம் செய்து, வழிபட்டனர். திருப்பூர் ஐயப்பன் கோவில், சவுண்டேஸ்வரி அம்மன் கோவில் உட்பட, பல்வேறு கோவில்களில், நவராத்திரி கொலு, சிறப்பு பூஜைகள், பஜனை, பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.