உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்

காஞ்சிபுரம் கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்

காஞ்சிபுரம்: பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் உள்ளது சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் கோவில். இக்கோவிலில், கடந்த1ம் தேதி, நவராத்திரி விழா துவங்கியது. ஒன்றாம் தேதி, உற்சவர் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 2ம் தேதி காமாட்சி அலங்காரத்திலும், 3ம் தேதி மீனாட்சி அலங்காரத்திலும், நேற்று, அன்னபூரணி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மாலை, மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

ஆர்.கே.பேட்டை :விடியங்காடு கிராமத்தில் உள்ள சக்தியம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. வரும் 10ம் தேதி வரை நடக்கும் திருவிழாவில், தினசரி காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலையில், மீனாட்சி, காமாட்சி என, தினசரி பல்வேறு அலங்காரத்தில் அம்மன் உள்புறப்பாடு எழுந்தருளுகிறார். நேற்று மதியம், மூலவர் அம்மனுக்கு, மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல், பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன் கோவிலில், நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவிலிலும், நவராத்திரி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !