உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலை சுடாமல் சுற்றி வரலாம்: சித்திரை வீதிகளில் கூலிங் பெயின்ட்!

மதுரை மீனாட்சி கோயிலை சுடாமல் சுற்றி வரலாம்: சித்திரை வீதிகளில் கூலிங் பெயின்ட்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெயில் தாக்கத்தில் இருந்து விடுபட சித்திரை மற்றும் ஆடி வீதிகளின் நடை பாதைகளில் ரசாயன கலவை இல்லாத கூலிங் பெயின்ட் பூசப்பட்டுள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருப்பர். இதை தவிர்ப்பதற்காக கிழக்கு, மேற்கு, தெற்கு கோபுரங்கள் மற்றும் தெற்காடி வீதி முன் தனியார் பங்களிப்புடன் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடமாடும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர ஆடி வீதிகளில் தென்னை நார் பாய்கள் விரிக்கப்பட்டுள்ளன. இதன் மீது நடந்து செல்லும்போது வெப்பத்தின் தாக்கம் இருக்காது. இத்தகைய வசதிகள் பக்தர்களின் சிரமத்தை குறைத்துள்ளது.

குளுகுளுன்னு நடக்கலாம் :
சித்திரை மற்றும் ஆடி வீதிகள் வழியாக கோயில் அழகை காணவும், கோயிலை வலம் வரும் பொருட்டும் ஏராளமான பக்தர்கள் காலணி அணியாமல் சுற்றி வருகின்றனர். மதிய வேலைகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி தரையில் கால்களை வைக்க முடியாதபடி கடும் சூடு இருக்கும். இதை தவிர்க்கும் பொருட்டு சித்திரை மற்றும் ஆடி வீதிகளின் நடை பாதை முழுவதும் ஒன்பதாயிரம் சதுர அடி பரப்பளவில் நான்கு அடி அகலத்தில், ரசாயன கலவை இல்லாத தெர்மல் இன்சுலேஷன் கோட்டிங் எனும் கூலிங் பெயின்ட் 300 லிட்டர் பூசப்பட்டுள்ளது. இவற்றின் மீது காலணி இல்லாமல் சென்றால் வெயிலின் தாக்கம் தெரியாது. இரு தனியார் பெயின்ட் நிறுவனங்கள் பங்களிப்புடன் கோயில் நிர்வாகம் இதை செய்துள்ளது. கூலிங் பெயின்ட் நடை பாதையை மூன்று ஆண்டு வரை பயன்படுத்தலாம். இனி என்ன... சித்திரை, ஆடி வீதிகளில் குளுகுளுன்னு கோயிலை சுற்றி நடையை கட்டலாம் வாங்க...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !