உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பிக்க கோரிக்கை

கரிவரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பிக்க கோரிக்கை

மடத்துக்குளம்: மடத்துக்குளம் கொமரலிங்கம் அமராவதி ஆற்றுபாலம் அருகேயுள்ள கரிவரதராஜ பெருமாள்கோவில், 2014, மார்ச் 27 ம் தேதி, பொதுமக்கள் முன்னிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால் மீண்டும் திறக்கப்பட்டது.  30 ஆண்டுக்குப்பின், திறக்கப்பட்ட இந்தக்கோவிலை ஆய்வு செய்த அதிகாரிகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளை கடந்தும் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவில், பல சிறப்பம்சங்களை கொண்டது. உட்புறம் அகழிக்கு மத்தியில் கோவில் உள்ளது. மேற்கூரையிலுள்ள துளைகள்  வழியாக அகழியில் சூரிய ஒளி விழும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியிலுள்ள ஒரு நீர்வரத்துக்கும் கோவிலுக்குள் உள்ள அகழிக்கும் இணைப்பு இருந்துள்ளது. வரலாற்று தகவல்கள் கூறும் பல கல்வெட்டுக்கள் உள்ளன. பல சிறப்புகள் உள்ள கோவில் தற்போது, பாழடைந்து, சமூக விரோதிகள் பயன்படுத்தும் இடமாக மாறி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு கோவிலை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !