லலிதாம்பாளுக்கு சோபனம் சொல்லலாமா?
நவராத்திரி நாட்களில் லலிதாம்பாள் சோபனம் வாசிப்பது வழக்கம். இப்போது நேரமின்மை காரணமாக குறைந்துவிட்டது. தேவி போருக்குப் புறப்படுவதும், தேவதேவர்கள் தேவியை வாழ்த்தி அனுப்புவதும், அசுரவதமும் யாவரும் அறிந்ததே. ஆனால் தேவியின் அவதாரம், கல்யாணமும் வெகு அழகான, விமரிசையான, வர்ணனையுடன் படிப்பது வழக்கம். கொலு வைக்காவிட்டாலும் மனக் கண்ணினால் பார்த்து, படித்து ரசிக்கலாம்.
நவராத்திரி நாட்கள் மட்டும் அல்லாமல் தினமுமோ, வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களிலும் வாசித்து ஆரத்தியெடுப்பது சகல க்ஷேமங்களையும் தரும் என்று பலச்ருதியில் விவரமாகக் காணப்படுகிறது. ஆரத்திப் பாட்டும் உள்ளது. நவராத்திரி நாட்களில் பெண்கள் கூடும்போது திருமண வைபவத்தை வாசித்துத் தாம்பூலம் தந்து சுபமாக ஆரத்தி எடுக்கலாம்.
லலிதா சோபனம்:
பண்டன் என்ற அசுரன் மிகக் கடும் தவமியற்றி ஈசுவரனிடம் வரம் வாங்கி வந்தான். என்ன வரம்? அறுபதினாயிரம் வருடம் சாம்ராஜ்யத்தை ஆளவும் அதோடு எவரும் அவனை ஜெயிக்க முடியாது என்ற வரமும் பெற்று மகிழ்ந்தான். அபரி மிதமான போகத்தில் திளைத்த பண்டாசுரன் மதிகெட்டு கொடுங்கோலனாகி தேவர்களுக்கு எல்லையற்ற துன்பத்தைத் தந்தான். தேவர்களை தன் கோட்டைக்குக் காவலர்களாகவும், சேவகம் செய்பவர்களாகவும் நியமித்து அவமதித்தான். துஷ்டனுடைய வலையில் வீழ்ந்து துன்பமடைந்த தேவலோகவாஸிகளுக்கு மகரிஷி நாரதர் நல்ல சமயத்தில் வந்து, புத்திமதி சொன்னார். துன்பத்திலிருந்து மீள வழிகாட்டினார்.
அவர் புத்திமதிப்படி தேவர்கள் லலிதாதேவியை ஆராதனை செய்து தங்களுடைய சங்கடங்களைத் தீர்க்க உக்கிர தபஸ் செய்தார்கள். ஆகார, நித்திரை விட்டொழித்து தேவியை நோக்கிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தும் தேவி பரத்யக்ஷமாகாமல் மனதுடைந்து, அவரவர் தேகத்தைக் கணுக்கணுவாய் வெட்டி ஹோமாக்கினியில் சேர்த்தனர். அப்படியும் தேவி பிரஸன்னமாகாமல் கால் முதல் தோள் வரை வெட்டி ஹோமங்கள் செய்து கழுத்துடன் ஹோமத்தில் குதிக்க நிச்சயித்தார்கள்.
அச்சமயம் ஆச்சரியமான தேஜஸை தேவர்கள் ஹோமாக்கினியில் கண்டனர். ஸ்ரீசக்ர ரதத்தைக் கண்டனர். அந்தச் ஸ்ரீசக்ர ரதத்தின்மேல் தேவர்களின் தாபத்தைத் தீர்க்க, பட்டுக்குடை கவிய சித்திரப்பொன்ரதம் பளிச்பளிச்சென்று ஒளிதிகழ தேவி, சிங்கார ரூபமாய் காந்தி மின்ன, சகிகள் ஆலவட்டம், வெண்சாமரம் வீச அக்னி குண்டத்தின் நடுவிலிருந்து அவதரித்தாள்.
பத்மராகத்தினால் இருபாதங்களிலும் பாதஸரம் பீலிகொலுசு, யானைத் துதிக்கை போல துடையழகு, சிவந்த பீதாம்பரம் உடுத்தி சிறுத்த இடையில் ரத்தின மேகலை, சிறிய தொப்புகள் சின்ன உதரத்தில், ஆகாய் மூன்று மடிப்புடன், ஹம்ஸம் போல் நடையழகுடன் வந்தாள் தேவி.
தாமரை மொட்டுப்போல் தளதளவென்ற இரு ஸ்தனங்களுடன், சரப்பளி முத்துஸரம் அணிந்து கழுத்தில் பல வகை ஜவந்தி முதலிய மாலைகளுடன், நவரத்தின மிழைத்த வளையல்கள், கொலுசும், கைகளில் மின்ன, கயிறும், துறட்டியும், புஷ்பமும் தாங்கி இருந்தாள்.
பவளம் போல் உதடு, குருக்கத்தி மொட்டுப்போல் பற்களின் ஒலி, கருநீலப் புஷ்பம் போல் விழி, தாம்பூலம் போல் காதுகள், வில் போன்ற புருவங்கள், சண்பக மொட்டுப்போல் மூக்கில் நத்தும் புல்லாக்கும், கண்ணாடி போல் கன்னங்களில் இரு காதுகளில் ஓலைக்குண்டலம், மாட்டல், இலங்கும் சந்திர அம்ருதம் கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர்.
அர்த்த சந்திரன் போன்ற நெற்றியில் சிந்தூரம் மூன்றாவது கண்ணைப்போல, அழகு நீளமான கேசத்தில், சந்திர சூரியப் பிரபை சுட்டி ராக்கொடியும், சிந்தாமணி ரத்தினத்தாலே இழைத்த கீரிடம் கேசத்தின் மேல் பளீரிட, சந்தனம், கஸ்தூரி புனுகு மாலையுடன் தரித்து வந்தாள் தேவி...
தேவர்கள் விழுந்து பணிந்தனர். தேவர்களுடைய தேஹ ரணத்தைக் கண்டு மெத்த இரக்கத்துடன், அனைவருடைய அங்கக் குறைகளையும் தீர்த்தாள் தேவி. திடமான தேஹத்தை அடைந்த தேவர்கள், தேவியை பலவிதமாகத் துதித்தனர்.
மூன்று உலகங்களும், நான்கு வேதங்களும், ஹரிப்ரம்மா, ஈசருடன் எல்லாம் உமது ரூபமே, தாங்கள் மஹிமை லக்ஷங்கோடி. அதில் சிறிதே நாங்கள் சொன்னோம் என்று தேவர்கள் மீண்டும் மீண்டும் ஸ்துதி செய்து நமஸ்கரிக்க, தேவி மனம் குளிர்ந்து, இன்று முதல் பயத்தை விட்டு விடுங்கள், இந்தப்பண்டாசுரன் நமக்குப் பஞ்சு மாத்திரம். அஞ்சு நிமிடத்தில் பண்டாசுரப்புழுவை அக்னி எரித்தாற்போல் வதைத்திடுவோம். என்னுடைய வாக்கிற்கு மறுவாக்கில்லை என்று அருளினாள்.
அம்மன் அவதாரமானதை அறிந்து பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், முதல் தேவலோகமே, திரண்டு வாராஹி, சாமுண்டி, மாதங்கி முதலிய மாதர் வரை வந்து தேவியின் சன்னிதியில் நிரம்பி இருந்தார்கள். மஹாதேவியை வணங்கி நமஸ்கரித்து பிரம்மாவின் ஆக்ஞைப் படி விஸ்வகர்மாவிடம் சொல்லி அழகான நகரமும் அதில் அதிசயமான அறைகளும், சிந்தாமணி ரத்தினம் ஜொலி ஜொலிக்கும் சிம்மாஸனமும் அமைத்தனர்.
இத்தனை பெருமையும் பேரழகும் கொண்ட தேவிக்குத் தகுந்த நாயகர் வேண்டும். அவர் ஈசர் அல்லாமல் வேறு ஒருவராக மாட்டார்; ஆனால் அவரோ சுடலையில் வசிக்கிறார் எலும்பும் பாம்புமே ஆபரணம், சாம்பல்பூசி, சடைமுடி தரித்து மண்டையோட்டைக் கையிலேந்தியவரை நாயகர் ஆக்குவது எப்படி என்று கவலைகொண்டனர் பிரம்மா உட்பட தேவர்கள்.
இப்படி பிரம்மா மனதிலெண்ணியதை ஈசர் அறிந்து அற்புதமான முப்பது கோடி மன்மதாசார ரூபமாய், ஸுந்தரமாய், மகுட குண்டல பீதாம்பரம் தரித்து, மார்பில் சந்தன முத்து மாலையுடனே தேவி முன்னே நின்றார். அதிஸுந்தரமான லலிதா தேவிக்கு இசைந்த அழகர் இவரே என்று பிரம்மா தீர்மானித்து ஈசருக்குக் காமேஸ்வரர் என்று பெயரிட்டார். தேவர்களெல்லாம், லலிதாதேவிக்கும், காமேஸ்வரருக்கும் கல்யாணம் செய்யலாமென்று ஓமென்று கூறி ஆசீர்வதித்தனர்.
விஸ்வகர்மாவும் மயனும் பேரழகுடைய கல்யாண மண்டபத்தை, ஸ்வர்ண ரத்னங்களால் நிர்மாணித்து, வாழை, கமுகு, கரும்பு, பூச்சரங்களால், வாடாதமாலைகளால் நிறைத்தார்கள். கொழுந்து, பிச்சி, மரு, குடமல்லி, இருவாக்ஷி மலர்களால் அலங்காரம் செய்தார்கள். தேவியைப் பார்த்து, காமேஸ்வரரை மணக்க சம்மதமா? என்று ஒடுக்க வணக்கமாகிக் கேட்டனர். தேவியும் தன் கழுத்திலுள்ள மாலையைக் கழற்றி அம்பலத்தில் வீச காமேஸ்வரர் கழுத்தில் அந்தமாலை அழகாய் அமர்ந்தது.
பதினெட்டு வாத்யங்கள் முழங்க, புஷ்பாஞ்சலி தேவர்கள் சொரிய, ஊர்வசி, ரம்பையர் நாட்டியமாட, ஈசரும் தேவியும், கல்யாண வேஷம் தரித்து கன்னூஞ்சல் ஆட, வாஸுதேவர் உமையவளை தாரை வார்த்தார்.
நல்ல முகூர்த்தத்தில் தேவசபை நடுவே பத்தினியுடன் கூட, விஷ்ணு காமேசருக்கு மதுவர்க்க மளித்து கன்னிகாதானம் செய்ய, காமேஸ்வரரும் லலிதாதேவிக்கு திருமாங்கல்ய தாரணம் கட்டினார்.
நெய்யால் ஹோமம் செய்து பாணிக்கிரஹணம் செய்து ஈசர் அம்மனை அம்மி ஏற்றி அக்னியை வலம் வந்து, பொரியினால் ஹோமம் செய்தார். மூன்று உலகத்தவரும் புகழ தம்பதிகளுக்குக் கரும்பும் வில்லும் கொடுத்தார். பிரம்மா, விஷ்ணு புஷ்பபாணங்களையும் வருணன் பாசத்தையும், விஸ்வ கர்மா இரண்டு துரட்டிகளையும், அக்னியும் , வாயுவும் ஒளியான அஸ்திரங்களையும், அமரரெல்லாம் அவரவர்களாலான அஸ்திரங்களையும் அம்பிகை முன் வைத்தனர்.
கல்யாணம் ஆனபின் தேவிக்கும், ஈசருக்கும் பரிபாலனம் செய்து ரக்ஷிக்க பட்டாபிஷேகம் செய்து, பட்டணப் பிரவேசத்திற்கு புஷ்ப விமானம் செய்து மகிழ்ந்தனர். பதினெட்டு வாத்யங்கள், மத்தளம், தாளங்கள், பாட்டு, புல்லாங்குழல், கேளிக்கைகளுடன், யானை, குதிரை, கொடி, ஆலவட்டம் வரிசையாய் வர, முனிவர்கள் தோத்திரம் செய்ய, தேவியையும், காமேஸ்வரரையும் ரதத்தில் ஏற்றி தெரு வீதி வலம் வரும்போது பெண்கள் ஹாரத்தி எடுத்தனர். சுபம் சுபம்.
தேவி ராஜக்கிருஹத்தில் காமேஸ்வரருடன் கூடி யாசித்த பேர்களுக்கெல்லாம் வேண்டிய வரங்களைத் தந்தாள். காமாக்ஷி என்று பெயர் கொடுத்தார்கள். தேவர்கள் காத்திருந்தனர். தேவர்கள் பதினாயிரம் வருடம் காத்திருப்பதாக நாரதர் வந்து செய்தி சொன்னார்.
தேவர்கள்படும் அல்லலைக் கேட்டு பண்டாசுரனை வதம் செய்ய கடல்போல் சேனையுடன் தேவி புறப்பட்டாள்.
பண்டாசுரன் மட்டுமல்ல, மதுகைடபர், சும்பநிசும்பன், மஹிஷாசுரன் எல்லோரையும் தேவி ஸம்ஹரித்தாள், தேவியின் கைகளால் யாவரும் ஸம்ஹரிக்கப்பட்டு மோக்ஷமடைந்தார்கள்.
ஹாரத்தி
மங்களம் ஜயமங்களம் ஜயமஹாதேவிக்கு
மங்களம் லலிதா தேவியுடன் மஹாகாளிக்கு.
சங்கு சக்ரம் கையில் தரித்த - சக்ரநாதைக்கு
சங்கையில் லாத அஸுரனைக் கொன்ற சாமுண்டி தேவிக்கு
துஷ்டன் அசுரர்களை ஜயித்த தூர்க்காதேவிக்கு.
சிஷ்டர்களான தேவரைக் காத்த ரத்தாம்பாளுக்கு
இஷ்ட தெய்வமாம் எங்களை ரக்ஷிக்கும் யமஸ்பரூபிக்கு
கஷ்டம் நீக்கிக் கருணை பொழியும் காமாக்ஷிதேவிக்கு
அஷ்டயோக பாக்கியமளிக்கும் ஆதிசக்திக்கு
துஷ்ட பண்டாசுரனை வதைத்த ஸ்ரீலலிதைக்கு
ஸகல தேவ ஸ்வரூபியான சக்தி கவுரிக்கு
அகில லோகத்தைப் பரிமாலித்தருளும் அம்பா தேவிக்கு
வாழ்க தேவி நாமம் வாழ்க, வாழ்க மறைகள் வாழ்கவே
வாழ்க மானிடர் வாழ்க ஆவினம் வளமையாகவே
பக்தருக்குள் பொழியும் ஸ்ரீபரதேவி வாழ்கவே.
அத்யந்த பக்தியுடன் படிக்கும் அன்பர் வாழ்கவே.