இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் எருதுகட்டு விழாவில் நம்பிக்கை
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நடந்த எருதுகட்டும் விழாவில் காளையின் கால்களிலிருந்து 3 சலங்கைகள் விழுந்ததால் 3 போக விவசாயம் உறுதி என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள வீரையா கோவிலில் ஆண்டுதோறும் மழைவேண்டி எருது கட்டும் விழா நடத்தப்படும். அப்போது காளையின் முன்னங்கால்களில் 4 ஐம்பொன் சலங்கைகள் கட்டப்பட்டு காளை அவிழ்க்கப்படும். ஓடும் போது கீழே விழும் சலங்கைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அந்தாண்டு விவசாயம் கணிக்கப்படும். ஒரு சலங்கை விழுந்தால் ஒரு போகம், 2 விழுந்தால் 2 போகம், 3 விழுந்தால் 3 போகம் விளையும் என்றும் 4 சலங்கை விழுந்தால் அந்த ஆண்டு பருவமழை பொய்த்து விவசாயம் சரியாக இருக்காது என்பது ஐதீகம். இத்தாண்டு அக்.10 ல் எருதுகட்டு விழா நடத்தப்பட்டது.
வெள்ளைக்காளை வீரையா கோவிலில் கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காளையின் வடத்தை அவிழ்த்துவிட்டதைத் தொடர்ந்து ஓடிய காளையின் கால்களில் இருந்து 3 சலங்கைகள் விழுந்தன . இதனால் இந்த ஆண்டு 3 போக விளைச்சலுக்குரிய மழை பெய்யும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.