பல்லவர் கால குபேரன் புடைப்பு சிற்பம் திருநாவலூர் கோவிலில் கண்டுபிடிப்பு
விழுப்புரம்: திருநாவலுார் சிவன் கோவில் மதில் சுவரில், பல்லவர் காலத்தை சேர்ந்த குபேரன் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, திருநாவலுார் கிராமத்தில் பக்தஜனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில், விழுப்புரத்தில் உள்ள, அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ், ஆய்வாளர் ஜீவா, ஜோதிபிரகாஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு குறித்து, உதவி பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது: எங்களது ஆய்வில், கோவில் வளாகத்தில், பல்லவர் காலத்தை சேர்ந்த குபேரன் புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. கோவிலின் மேற்கு மதில் சுவரின் கிழக்கு பக்கத்தில், குபேரன் புடைப்பு சிற்பத்தை, பிற்காலத்தில் வைத்து கட்டியுள்ளனர். நின்ற நிலையில் யானையும், அதற்கு மேலுள்ள பலகை போன்ற பகுதியில் ஸ்ரீகலிநாரை என்று பல்லவர் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வாசகமும் காணப்படுகிறது. இதையடுத்துள்ள நாசிகூடு போன்ற பகுதியின் நடுவில் குபேரன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
குபேரன் வலது காலை பீடத்தில் மடித்தும், இடது காலை ஊன்றியும் அமர்ந்த நிலையில் உள்ளார். வலது கையை திண்டின் மீது வைத்துள்ளார். இடது கை அபய முத்திரை காட்டியவாறு உள்ளது. இவரது வலதுபுறத்தில் பதுமநிதியை காட்ட பத்மமும், இடதுபுறத்தில் சங்கநிதியை நினைவூட்ட சங்கும் காணப்படுகிறது. இச்சிற்பம் குள்ளமான உருவமும், பருத்த முகமும், பெரிய வயிறும் கொண்டுள்ளது. தலையில் மகுடம், காதில் பத்ரகுண்டலம், தலையின் இருபுறமும் தாழ்சடை பெற்று, கழுத்தில் பெரிய மாலை, தடித்த முப்புரி நுால், கைகளில் கைவளைப் பெற்று காணப்படுகிறது. இதேபோன்று, கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தச்சூர் என்னும் ஊரிலும் பல்லவர் கால குபேரன் சிற்பம் உள்ளது. புதுச்சேரி மாநிலம் திருபுவனை பெருமாள் கோவில் கருவறையின் வடக்கு அதிட்டானத்தில் குபேரன் சிற்பம் உள்ளது. பல்லவர் காலத்தில், திருநாவலுாரில், கலிநாரீஸ்வரம் என அழைக்கப்படும் சிவன் கோவில் இருந்தது பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆனால், அக்கோவில் பிற்காலத்தில் மறைந்துபோனது. எனினும், அக்கோவிலில் இருந்த குபேரன் சிற்பம், 16 பட்டை லிங்கம் மற்றும் கோவில் கட்டுமான கற்களான செம்பராங்கற்கள் (மணல் கல்) தற்போதுள்ள, பக்தஜனேஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படுகிறது.
இதன்மூலம், பல்லவர் காலத்தில் சிவன் கோவில் ஒன்று இருந்தது என்பது உறுதியாகிறது. அந்த கோவிலின் வடபுறத்தில் இந்த குபேரன் சிற்பம் இருந்திருக்க வேண்டும். கோவில் அழிந்த பின், பக்தஜனேஸ்வரர் கோவில் மதில் சுவரில் இவை பிற்காலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. இவ்வாறு, உதவி பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.