உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி திருவீதி உலா: சொக்க வைத்த கலைவிழா

சுவாமி திருவீதி உலா: சொக்க வைத்த கலைவிழா

கோவை: ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி சுவாமி திருவீதி உலாவில் நடந்த கலைவிழா கோவை மக்களை பிரம்மிக்க வைத்தது.

ஆர்.எஸ்.புரம் அன்னபூரணேஸ்வரி கோவிலில் உள்ள வேதபாடசாலையில், 26வது ஆண்டு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. கடந்த, 1ம் தேதி முதல் பல்வேறு ஹோமங்கள் நாள்தோறும் நடத்தப்பட்டன. நேற்று அன்னபூரணேஸ்வரி சுவாமியின் திருவீதி உலா, கோவில் வளாகத்தில் துவங்கி, தடாகம் ரோடு, சம்பந்தம் ரோடு வழியாக மீண்டும் கோவில் சன்னதிக்கு வந்தடைந்தது. நிகழ்ச்சியை, மாநகராட்சி மேயர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். திருவீதி உலாவில், தமிழக நாட்டுப்புறக்கலைஞர்கள் காளி ஆட்டம், கட்டை கால் ஆட்டம், கோலாட்டம் ஆடி அசத்தினர்.

கர்நாடக கலைஞர்கள் நடத்திய கிராமிய நடனம், பூஜா குனித்தா, வீரபத்திர நடன நிகழ்ச்சிகளும், கேரள கலைஞர்களின் தீரா, பஞ்சாவாத்தியம், காவடி, நாதஸ்வரம், கலரு பொங்கல் நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்கு கலை விருந்தாக அமைந்தன. சிவன், பிரம்மா, கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் வேடங்களில் அச்சு அசலாக உலா வந்தவர்களை பார்த்து, பக்தர்கள் பரவசம் அடைந்தனர். கோவில் நிர்வாக அறங்காவலர் ரவி சாம் கூறுகையில், ‘‘கிராமிய நடனங்களை இங்கு பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நாட்டுப்புறக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இதை நடத்த திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !