உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்தம் தெறிக்க கோவையில் கத்தி போடும் திருவிழா

ரத்தம் தெறிக்க கோவையில் கத்தி போடும் திருவிழா

கோவை: கத்தியால்  உடலில் குத்திக் கொண்டு, ரத்தத்தை வரவழைத்து, ஊர்வலமாக சென்று, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் கத்தி போடும் திருவிழா, நேற்று கோவையில் நடந்தது.

தேவாங்க சமுதாயத்தை சேர்ந்த மக்கள், ஆண்டு தோறும் விஜயதசமி நாளில், கத்தி போடும் வைபவம் நிகழ்த்தி, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அப்போது, தங்களது இரு கரங்களின் மேற்பகுதியில், கத்தியால் குத்திக் கொண்டு குருதி சிந்தி, தங்களை வருத்திக் கொண்டு, கடவுளுக்கு தங்களது நன்றியை ரத்தத்துடன் காணிக்கையாக்குவர். இந்த நிகழ்ச்சி, நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டிலிருந்து, பாகுகலச ஊர்வலம் புறப்பட்டது, கலசத்துக்கு முன்னும், பின்னும், இளைஞர்கள், ‘வேசுக்கோ தீசுக்கோ’ என்றபடி, கூர்மையான கத்திகளைக் கொத்தாகப் பிடித்து, தங்களது இரு கைகளிலும் கீறிக் கொண்டு ரத்தத்தை வரவழைத்தனர்; அருகில் வந்த உறவினர்கள், ரத்தம் தெறிக்கும் காயங்களில், மஞ்சள் பொடியை துாவி ரத்தத்தை கட்டுப்படுத்தினர். சாய்பாபா காலனியிலுள்ள, நெசவாளர் காலனி, விநாயகர் கோவிலில் புறப்பட்ட பாகுகலச ஊர்வலத்தின் முன்னும், பின்னும், சிறு மாணவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் என்று பல ஆயிரக்கணக்கானோர், கத்தி போட்டபடியே ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலம், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, பூமார்க்கெட், ரங்கே கவுடர் வீதியிலுள்ள, சவுடம்மன் கோவிலை அடைந்தது.

இதே போன்று மற்றொரு ஊர்வலம், ஆர்.எஸ்.புரம், ராமச்சந்திரா ரோட்டிலுள்ள, விநாயகர் கோவிலில் துவங்கி, மேட்டுப்பாளையம் ரோடு, ரங்கே கவுடர் வீதி, மில்ரோடு, ஒப்பணக்கார வீதி வழியாக, ராஜவீதி, சவுடம்மன் கோவிலை அடைந்தது. ஐந்து கி.மீ., தொலைவை, கத்தி போட்டபடியே, பக்தர்கள் நடந்து கடந்தனர். இதில், பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, சவுடம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். வழிநெடுக போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கத்திபோடும் விழாவையொட்டி, ஊர்வலத்தில், நீர்மோர், குளிர்பானம், கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. தேவாங்க சமுதாயத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர், இந்த திருவிழாவில், பக்திப் பரவசத்துடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !