வனதுர்க்கையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருத்தணி: வனதுர்க்கையம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி மடம் கிராமத்தில், வனதுர்க்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி விழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. தினமும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்தனர்.
உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திருத்தணி நகர வாசிகள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். அதே போல், திருத்தணி சேகர்வர்மா நகரில் உள்ள சக்திவிநாயகர் கோவிலில் நேற்று, நவராத்திரி விழாவை ஒட்டி, காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் சுமங்கலி பூஜை நடந்தது.