கூடலுார் கோவில்களில் நடந்த வித்யாரம்பம்
கூடலுார்: கூடலுாரில் உள்ள கோவில்களில், குழந்தைகளுக்கான, வித்யாரம்பம் நிகழ்ச்சிநடந்தது.
ஆண்டு தோறும், விஜயதசமி நாளில், குழந்தைகளுக்கான எழுத்து பயிற்சியை துவக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி அனைத்துபகுதிகளில் நடந்து வருகிறது. சரஸ்வதி பூஜையுடன் நடக்கும் இந்த நிகழ்ச்சி, கூடலுார் விநாயகர் கோவில், முனீஸ்வரன் கோவில், மேல் கூடலுார் மாரியம்மன் கோவில், தேவர்சோலை சிவன் கோவில் ஸ்ரீமதுரை மாஹவிஷ்ணு கோவில், மண்வயல் மாதேஸ்வரன் கோவில், கல்லிங்கரை சிவன் கோவில், நம்பாலகோட்டை வேட்டைகாரப்பன் கோவில் உட்பட, 40க்கும் மேற்பட்ட கோவில்களில் நடந்தது.
இதில், தங்களின் குழந்தைகளுடன், பெற்றோர் திரளாக பங்கேற்று, சிறப்பு பூஜைகளுடன், எழுத்து பயிற்சியை துவக்கினர்.
பந்தலுார்: பந்தலுார் அருகே சிவன்கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியும் துவக்கிவைக்கப்பட்டது.
லட்சுமிக்குட்டி டீச்சர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஸ்ரீகுமரன் ஆகி யோர், குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தனர். நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி தலைவர் சதானந்தன், நிர்வாகி சுந்தரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயாவில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சுரேந்திரன் தலைமை வகித்தார். சுவாமி கிருஷ்ணா நந்தகிரி மடாதிபதி ஓம்காரனந்ததீர்த்தா குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மோகன்தாஸ், மனோஜ்குமார், முதல்வர் ஷிபு, உதவி தலைமையாசிரியர் ஷீஜா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர். மேலும் வாலாட்டு விஷ்ணு கோவில், பொன்னானி மகா விஷ்ணு கோவில், பந்தலுõர் முருகன் கோவில், வெள்ளேரி சிவன் கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதேபோல, ஊட்டி ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமானோர் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சியை துவக்கினர். ஊட்டி பெருமாள் கோவிலில், தெய்வீக நற்பணி மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்து பங்கேற்றனர்.
இதேபோல ஊட்டி, குன்னுார், அருவங்காடு, வெலிங்டன் உட்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது.