ஆயிரம் நாமம் கொண்ட அகரம் முத்தாலம்மன்!
திண்டுக்கல்லிலிருந்து ஒன்பது கி.மீ., துாரத்தில், கரூர் ரோட்டில் தாடிக்கொம்பு அருகே அகரம் பேரூராட்சியில் அமைந்துள்ளது முத்தாலம்மன் கோயில். ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றுமில்லா இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் என்று மணிவாசகப் பெருமான் கூறுவார். அதே போல் அம்பாளுக்கும் அகிலாண்ட கோடி, பிரமாண்ட நாயகி, அனாதை ரட்சகி, ராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சச்சிதானந்த ஈஸ்வரி, சர்வ ஜீவ தயாபரி, சர்வரோக ரட்சகி, நீலகண்டாயி, மாதங்கி, கவுமாரி, வராகி, நாராயணி உட்பட ஆயிரம் நாமங்கள் உண்டு. இத்திருத்தலத்தில் அகரம் முத்தாலம்மன் என்ற திருநாமத்தில் அம்பாள் அருளாட்சி செய்து வருகிறார். அகரம், தாடிக்கொம்பு கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களின் தெய்வமாக இருந்து அம்பாள் அருள் பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு: தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் இக்கோயிலுக்கு வருகின்றனர். கோயில் கருவறையில் அகர முத்தாலம்மன் இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று அம்சத்தில் கையில் அட்சய பாத்திரத்துடன் நின்ற கோலத்தில் மூன்று உருவங்களாக காட்சி அளிக்கிறார். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகப்பு மண்டபம் ஆகிய அமைப்புடன் சுற்றுப்பிரகாரத்துடன் இந்த கோயில் அமைந்துள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், கரலிங்கேஸ்வரர், விசாலாட்சி, பாலமுருகன், மாகாலட்சுமி, துர் கை, நவகிரகங்கள் ஆகிய மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தின் கன்னி மூலையில் ஒரு விநாயகரும் வீற்றிருக்கிறார். காவல் தெய்வங்களாக ஆண் பூதம் ஒன்றும், பெண் பூதம் ஒன்றும் பிரகாரத்தில் பெரிய சிலைகளாக உள்ளன. 450 ஆண்டு பழமை வாய்ந்தது இக்கோயில்.
பிரதோஷ வழிபாடு: 1990, 2005 ல் குடமுழுக்கு செய்யப்பட்டு, ஆன்மிக ஈடுபாட்டின் நலன்களையும் அழகுற பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள சுரலிங்ககேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடைபெறும். பிரதோஷ வழிபாட்டின் போது உற்சவ மூர்த்தியாகிய சிவ பெருமானும், உமையம்மையும் கோயிலில் வலம் வரும் நிகழ்வும் தொடர்ந்து நடந்து வருகிறது. சிவபெருமானுக்குரிய சிறப்பு வைபவங்கள் அனைத்தும் அந்தந்த நாட்களில் நடைபெறும்.
விசேஷ பூஜைகள்: ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விநாயக பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளுக்கு விசேஷ பூஜைகளும், ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அம்பாளுக்கு விசேஷ பூஜையுடன் உற்சவ மூர்த்தியாகிய அம்மன் வலம் வரும் நிகழ்வும் தொடர்ந்து நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நாளில் பாலமுருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, உற்சவ மூர்த்தியாகிய வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் கோயிலை வலம் வரும் நிகழ்வும் நடத்தப்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க விசாலாட்சி, துர்க்கைக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி நாட்களில் நவகிரகங்களுக்கு சிறப்பு ஹோம பூஜை நடத்தப்பட்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.
பட்டாளம்மன் சாட்டுதல்: உற்சவம் நடத்த அம்மன் உத்தரவு கிடைத்ததும் மறு வெள்ளிக்கிழமை பட்டாளம்மன் சாட்டுதல் நடைபெறும், அடுத்த வெள்ளிக்கிழமை பட்டாளம்மனுக்கு பொங்கலிடுதல் நடைபெறும். பட்டாளம்மனுக்கு பொங்கலிடும் நாளில் செல்லாண்டியம்மன் சாட்டுதல் நடைபெற்று, அதன் ஐந்தாம் நாள் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு பொங்கலிடுதல் நடக்கும். அம்பாள் கண் திறப்பு வைபத்தையும், அம்பாள் சோலைக்கு செல்லும் வைபவத்தையும் அனுசரித்து ஐப்பசி முதலாம் செவ்வாய் கிழமைக்கு முந்தைய பத்தாம் நாள் ஞாயிறன்று இரவு முத்தாலம்மன் சாட்டுதல் மிக சிறப்பாக நடைபெறும். இந்த நிகழ்வில் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொள்வர். அம்மன் சாட்டுதலின் மறுநாளாகிய திங்கள் முதல் அடுத்து வரும் ஞாயிற்று கிழமை வரை இரவில், தினமும் பண்டாரப்பெட்டியை பல்லக்கில் வைத்து உற்சவ மூர்த்தியாகிய அம்மன் திருவுருவத்துடன் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யும் நிகழ்வு நடக்கும். கோயிலில் கண் திறப்பு வைபவமே திருவிழாவின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க,மேளதாள வாத்தியங்கள் முழங்க சகல ஆராதனைகளுடன் அம்மனின் திருவுருவத்தில் திரை நீக்கி கண் திறப்பு மண்டபத்தில் அம்மன் காட்சி தரும் வைபவம் கண் கொள்ளாக் காட்சியாகும். அக்டோபர் 12 முதல் விழா துவங்கி நடந்து வருகிறது. இன்று கண் திறப்பு வைபவமும், நாளை அம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் விழாவும் நடக்கிறது.
முத்தாலம்மன் கோயில் வரலாறு: திண்டுக்கல் மாவட்டம் அகரம் திருத்தலத்தில் பல அற்புதங்கள் புரிபவளாக விளங்குகிறாள் முத்தாலம்மன். விஜயநகரப்பேரரசு காலத்தில் வடநாட்டில் வசித்த கராயர் அய்யர் என்ற பக்தர் தென்திசை வந்தார். வரும்போது தான் தினமும் வணங்கி வந்த அம்பாள் கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்து வைத்துக் கொண்டார். அம்பிகை, தான் விரும்பும் இடத்தில் மண்ணை வைத்து, தன்னை வணங்கும்படி உத்தரவிட்டாள். அம்பிகை உத்தரவுப்படி இவ்விடத்தில் மண்ணை வைத்தார். அங்கு ஒரு கல்லை மட்டும் வைத்து அம்பிகையை வணங்கி வந்தார். பிற்காலத்தில் இங்கு வசித்த பக்தர் ஒருவர் மூன்று அம்பிகையர் சிலை வடித்து பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். அம்பிகைக்கு முத்தாலம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. முத்தாலம்மனுக்காக தோன்றிய முதல் தலமாக கருதப்படுவதாலும், தமிழ் எழுத்துக்களில் அகரமே முதன்மை என்பதன் அடிப்படையிலும் ஊருக்கு அகரம் என்ற பெயர் ஏற்பட்டது.
கேட்டதைக் கொடுக்கும் அம்பிகையர்: எந்தச்செயலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று விஷயம் அடிப்படையாகத் தேவைப்படும். முதலில் செய்ய வேண்டிய செயலைப் பற்றி ஆசைப்பட வேண்டும். பின், ஞானத்துடன் அதை செயல்படுத்த வேண்டும். இவையே இச்சா(ஆசை)தி, கிரியா (செயல்)தி, ஞான (அறிவு)தி எனப்படும். இம்மூன்றையும் தரும் மூன்று அம்பிகையர் மூலஸ்தானத்தில் உள்ளனர். இம்மூவரும் நின்றபடி கையில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் இருக்கின்றனர். இதனால், இவர்களிடம் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இப்பகுதி மக்களுக்கான பிரதான குலதெய்வ வழிபாட்டுத்தலம் இது. பவுர்ணமி நாட்களில் அம்பிகைக்கு விசேஷ பூஜை உண்டு.
மஞ்சள் பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் கிடைக்க அம்பாள் சன்னதியில் 5 எலுமிச்சை மற்றும் குளியல் மஞ்சளுடன் வந்து வழிபடுகின்றனர். அர்ச்சகர்கள் அதை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, தலா மூன்றை மட்டும் பிரசாதமாகத் தருவர். எலுமிச்சையை சாப்பிட்டும், மஞ்சள் கிழங்கை குளித்தும் வர குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள்.
திருமண தடை நீக்கும் மகாகணபதி: குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்த கோயில் இது. இங்குள்ள விநாயகர், ஞானத்துடன் வேண்டும் வரங்களையும், செயல்களில் வல்லமையும் கிடைக்க அருள் செய்பவர் என்பதால் அருள்ஞான சுந்தர மகாகணபதி என்றே அழைக்கப்படுகிறார். திருமணத்தடை உள்ளோர் இவருக்கு தேங்காய் மாலை அணிவித்து வேண்டிச் செல்கின்றனர். இங்கு விசாலாட்சி அம்பிகையுடன், ஐந்து முகங்களுடன் கூடிய சுரலிங்கேஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். லிங்கத்தின் நான்கு புறமும் நான்கு முகங்கள் உள்ளன. மற்றொரு முகத்தைக் காண முடியாது. பிரதோஷ பூஜையும், ஐப்பசியில் அன்னாபிஷேக வைபவமும் இவருக்கு விசேஷமாக நடக்கும். பிரகாரத்தில் விநாயகர், பாலமுருகன், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன. முருகனுக்கு கிருத்திகை நாட்களில் விசேஷ பூஜை உண்டு. குரு, சனிப்பெயர்ச்சி காலங்களில் கிரக பரிகார ஹோமங்களும் நடக்கும்.