உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதூர் வருகிறார் திருவள்ளூர் வீரராகவ பெருமாள்!

ஸ்ரீபெரும்புதூர் வருகிறார் திருவள்ளூர் வீரராகவ பெருமாள்!

ஸ்ரீபெரும்புதுார்;திருவள்ளூரில் இருந்து, வீரராகவப் பெருமாள் இன்று ஸ்ரீபெரும்புதுாருக்கு வருகை தருகிறார். சுவாமி ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதுார் குளக்கரையில் கோவில் கொண்டுள்ள வேதாந்த தேசிகனின் அவதார உற்சவம் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில், காஞ்சிபுரம் மாநகரில் துாப்புல் என்ற இடத்தில் (ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் கோவில் அமைந்துள்ள இடம்) அவதரித்தவர், வேதாந்த தேசிகன். இவர், திருமலை பெருமாளின் அம்சம் என, புகழப்படுபவர். அவரின் அவதார தினமான புரட்டாசி திருவோணம் அன்று அவருடைய சாற்றுமறை மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் கோவில் கொண்டுள்ள வேதாந்த தேசிகனின், 748வது அவதார சாற்று மறைக்காக, வீரராகவப் பெருமாள் தாமே எழுந்தருளுவது வழக்கம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் வரை நடைபெற்று வந்த இந்த விழா, சில காரணங்களால் நின்று போனது. பின், 2003ம் ஆண்டு முதல், அஹோபில மடத்தின் தர்ம கர்த்தாக்கள் உத்தரவின் படி நடைபெற்று வருகிறது. திருவள்ளூரிலிருந்து நேற்று இரவு புறப்பட்டு, மணவாள நகர், சத்திரம், செங்காடு, மண்ணுார், தொடுகாடு, ஆயக்கொளத்துார் போன்ற இடங்களில் பெருமாள் மண்டகபடி கண்டருளி, இன்று அதிகாலை, 4:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் எல்லையை வந்தடைவார். இதை முன்னிட்டு, வேதாந்த தேசிகன், ஊர் எல்லையில் முன்னதாகவே எழுந்தருளி, வீரராகவப் பெருமானை பூரண கும்ப மரியாதையுடன் எதிர் கொண்டு அழைப்பார். பிறகு ஸ்ரீபெரும்புதுார் வீதிகளில் புறப்பாடு கண்டருளி, காலை, 6:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் அஹோபில மடத்திற்கு எழுந்தருளுவார்.

பக்தர்களின் பொது தரிசனத்திற்கு பிறகு, காலை, 9:30 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் மாட வீதிகளில் திருவாபரண திருமேனியுடன் வேத பாராயண மற்றும் தேசிக ஸ்தோத்திரங்கள் பாராயணங்களுடன் புறப்பாடு கண்டருளி, 11:00 மணிக்கு வேதாந்த தேசிகர் கோவிலை வந்தடைவார். பகல், 1:00 மணிக்கு வீரராகவப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். இரவு, 7:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை நடைபெறும். இரவு, 9:30 மணிக்கு பெரிய மாட வீதிகளில் புறப்பாடு நடைபெறும். புதன்கிழமை அதிகாலை, 2:30 மணிக்கு திருவாய் மொழி சாற்றுமறை நடைபெறும். 4:00 மணிக்கு புறப்பாடு கண்டருளி, ஸ்ரீபெரும்புதுார் ஊர் எல்லையில் வீரராகவப் பெருமாளுக்கு பிரியாவிடை நடைபெறும். பகல், 1:00 மணிக்கு வீரராகவப் பெருமாள் திருவள்ளூர் கோவிலை சென்றடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !